விழுப்புரம் நரசிங்கபுரம்முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
விழுப்புரம் நரசிங்கபுரம் முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
விழுப்புரம் நரசிங்கபுரம் நெடுந்தெருவில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடந்து முடிந்ததை தொடர்ந்து கோவிலின் மகா கும்பாபிஷேக விழா கடந்த 25-ந் தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து நவக்கிரக ஹோமம், வாஸ்துசாந்தி, லட்சுமி ஹோமம், அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், ரக்ஷாபந்தனம், நாடி சந்தானம், முதல்கால யாக பூஜையும், நேற்று முன்தினம் உற்சவமூர்த்திக்கு திருமஞ்சனம், 2-ம் கால யாக சாலை பூஜை, காயத்திரி மந்திர ஹோமம், திரவியாகுதி, மகா பூர்ணாகுதி, தீபாராதனை, 3-ம் கால யாக பூஜை, மகா தீபாராதனையும் நடந்தது.
இதை தொடர்ந்து நேற்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு மேல் கோ பூஜை, ரக்ஷாபந்தனம், 4-ம் கால யாகபூஜை, வேத பாராயணம், யாத்ராதானம், மகா பூர்ணாகுதியும், 10 மணிக்கு கடம் புறப்பாடாகி 10.30 மணியளவில் முத்துமாரியம்மன், பாலகணபதி, பாலமுருகன், ஆஞ்சநேயர், அய்யப்பன், நவக்கிரகங்கள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.