பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்


பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
x

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சமூக விரோத கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையில் நீண்ட காலமாக பொது வாழ்வில் இருந்து வரும் ஆம்ஸ்ட்ராங்(54) சமூகத்தின் அடித்தட்டு மக்களின் உரிமைகளுக்காக போராடி வந்தவர்.

1980-களின் தொடக்கத்தில் உத்தரப் பிரதேசத்தில் முனைவர் கான்சிராம் தொடங்கிய டி.எஸ்.4 இயக்கத்தில் ஈர்க்கப்பட்டு பகுஜன் சமாஜ் கட்சியில் இணைத்து பணியாற்றி வந்தவர். கட்சியின் தற்போதைய தலைவர் மாயாவதி அவர்களின் மாறாத பாசத்தை பெற்றவர். சமூக விரோத கும்பல் திட்டமிட்டு நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த கொடுங் குற்றச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அரசும், காவல் துறையும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், பகுஜன் சமாஜ் கட்சியினருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது."

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story