குடிநீர் கேட்டு நகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை
கடையநல்லூரில் குடிநீர் கேட்டு நகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடையநல்லூர்:
கடையநல்லூரில் குடிநீர் கேட்டு நகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடிநீர் தட்டுப்பாடு
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம், கருப்பாநதி மற்றும் கல்லாற்று குடிநீர் திட்டத்தின் மூலம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கிய நிலையில் தென்மேற்கு பருவமழை தாமதமானதால் கடையநல்லூர் நகராட்சிக்கு கிடைக்க வேண்டிய தாமிரபரணி மற்றும் கருப்பாநதி பகுதியிலிருந்து வழங்கப்படும் குடிநீர் குறைந்தது.
இதனால் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது 7 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
முற்றுகை
இந்தநிலையில் நகராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு வடக்குவிளை தெருவை சேர்ந்த பொதுமக்கள், தங்களது பகுதிக்கு நகராட்சி சார்பில் 7 நாட்கள் ஆகியும் குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து அருகில் உள்ள வார்டு திட்டப் பணிகளை பார்வையிட சென்ற கடையநல்லூர் நகராட்சி பொறியாளர் ஜீவா மற்றும் நகராட்சி அலுவலர்களை முற்றுகையிட்டனர்.
எங்கள் பகுதிக்கு தேவையான குடிநீர் முறையாக வழங்க வேண்டும். 6 மாதத்திற்கு ஒருமுறையாவது கழிவுநீர் ஓடையை சுத்தம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.