தென்னை சாகுபடியில் அதிக மகசூல் ஈட்ட வேண்டுமா?


தென்னை சாகுபடியில் அதிக மகசூல் ஈட்ட வேண்டுமா?
x

தென்னை சாகுபடியில் அதிக மகசூல் ஈட்ட வேண்டுமா?

திருப்பூர்

அடி முதல் நுனி வரை மனிதர்களுக்கு பயன் தரக்கூடிய தென்னை மரங்களை சொர்க்கத்தின் மரம் என்று சொல்லலாம். ஆற்றங்கரையோர நிலங்களில் மட்டுமே வளர்க்கப்பட்ட தென்னை மரங்கள் இப்போது அனைத்து விதமான மண் வகைகளிலும் வளர்க்கப்பட்டு வருகிறது. தென்னையில் நெட்டை, குட்டை மற்றும் கலப்பினம் (ஒட்டு ரகம்) என 3 வகைகள் உள்ளது. நீண்ட வாழ்நாள் கொண்ட நெட்டை ரகங்களை விட குறுகிய காலத்தில் மகசூல் ஈட்டக்கூடிய குட்டை ரகங்களை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதில் சவ்காட் ஆரஞ் குட்டை, சவ்காட் பச்சை குட்டை ரகங்கள் தமிழகத்தில் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதுதவிர நெட்டை மற்றும் குட்டை ரகங்களை சேர்த்து உருவாக்கப்படும் கலப்பின ரகங்கள் அதிக மகசூல் கொடுப்பதுடன் கொப்பரை உற்பத்திக்கு சிறந்ததாக உள்ளது. இதனால் கலப்பின ரகங்களும் பெரும்பாலான விவசாயிகளின் தேர்வாக உள்ளது.

தென்னையில் கன்றுகள் தேர்வு என்பது மிக முக்கிய இடம் பிடிக்கிறது. 9 முதல் 12 மாதங்கள் வரை வளர்ந்த கன்றுகளை தேர்வு செய்யலாம். ஆரோக்கியமான தென்னங்கன்றுகளை அதன் இலைகளின் மூலம் அடையாளம் காண முடியும். ஒவ்வொரு ஓலை மட்டையின் இடுக்கிலும் ஒரு பூங்குலை தோன்றும் என்பதால் குறைந்தது 6 இலைகள் உடைய, பச்சையான இலைகள் கொண்ட தென்னங்கன்றுகளை தேர்வு செய்ய வேண்டும். அதிக பூம்பாளைகள் உற்பத்தியே அதிக மகசூலுக்கு வழிவகுக்கும். அதுபோல கன்று வளர்ச்சியின் தொடக்கத்தில் ஒவ்வொரு ஓலை உற்பத்தியின் போதும் ஒரு வேர் உற்பத்தியாகும். எனவே அதிக ஓலை உள்ள கன்றுகளில் அதிக வேர்களும் இருக்கும். இது தென்னை மரம் நல்ல வேர்ப்பிடிப்போடு வளர்வதற்கு உதவும்.

மேலும் கன்றின் தடிமன் மற்றும் சுற்றளவிலும் கவனம் செலுத்த வேண்டும். 9 முதல் 12 மாத கன்றின் சுற்றளவு 10 முதல் 12 செ.மீ. என்ற அளவில் இருப்பது நல்லது. தென்னங்கன்றுகளை நாற்றுப் பண்ணைகளில் வாங்காமல் தாங்களாகவே உற்பத்தி செய்ய விரும்பும் விவசாயிகள் தாய் மரங்களை தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான, நோயற்ற, 20 முதல் 25 வயதிலான தென்னை மரங்களை தேர்வு செய்யலாம். அவற்றிலிருந்து முற்றிய காய்களை பறிக்காமல் தானாகவே விழும் வரை காத்திருக்கலாம். ஏனென்றால் தானாகவே விழும் காய்கள் நாற்று உற்பத்திக்கு சிறந்ததாக கருதப்படுகிறது.

மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தேங்காய்களை இருட்டு அறையில் சுமார் 2 மாதங்கள் வரை இருப்பு வைக்கலாம். அதில் வற்றிய, அழுகிய காய்களை ஒதுக்கி விட்டு முற்றிய, பழுத்த, முதிர்ந்த காய்களை தேர்வு செய்து நாற்று உற்பத்திக்கு பயன்படுத்தலாம். பொதுவாக தென்மேற்கு அல்லது வடகிழக்குப்பருவமழை ஆரம்பமாவதற்கு 2 மாதங்களுக்கு முன் நாற்றுகளை நடவு செய்வது சிறந்தது. அதன்படி ஜூன்-ஜூலை மற்றும் டிசம்பர்-ஜனவரி மாதங்கள் தென்னங்கன்று நடுவதற்கு ஏற்ற பருவங்களாகும். இன்றைய நிலையில் விவசாயம் என்பது சவாலாக மாறிவிட்ட சூழலில் தென்னை சாகுபடியில் வெற்றி பெற கன்றுகளை தேர்வு செய்வதில் விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

==========


Next Story