மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி


மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
x

மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார். மற்றொரு விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கரூர்

மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 30). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து கரூரில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வெள்ளியணை வழியாக மஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வெள்ளியணை-ஜெகதாபி சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோரம் மரத்தின் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கோவிந்தராஜ் படுகாயம் அடைந்தார்.

வாலிபர் பலி

இதையடுத்து படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கோவிந்தராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த கோவிந்தராஜூக்கு பூர்ணிமா (29) என்ற மனைவியும், சுர்ஜித் வர்ஷன்(9), லக்ஷன்(4) என்ற 2 ஆண் குழந்தைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு சம்பவம்

நாமக்கல் மாவட்டம், மோகனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் லட்சுமணகுமார் (32). கரூர் மாவட்டம் வாங்கல் அக்ரஹாரம் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் வினித் (29). இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று விட்டு சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கரூர் செல்வதற்காக வந்து கொண்டிருந்தனர்.

அய்யம்பாளையம் பிரிவு சாலை பகுதியில் வந்த போது, பின்னால் கரூர் வெள்ளாளப்பட்டி நல்லப்பன் நகர் தொழில்பேட்டை பகுதியை சேர்ந்த அருண் (34) என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த லட்சுமணகுமார், வினித் ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் டிரைவர் அருண் மீது வழக்குப்பதிந்து, அந்த காரை பறிமுதல் செய்தனர்.


Next Story