மாதம் தோறும் ஒரு கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் - கலெக்டர் தகவல்


மாதம் தோறும் ஒரு கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் - கலெக்டர் தகவல்
x

மாதம் தோறும் ஒரு கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படும் என்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள நம்பாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். கும்மிடிபூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே.கோவிந்தராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இதை முன்னிட்டு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை திட்டத்தின்கீழ் 200 பயனாளிகளுக்கும், முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையாக 52 பயனாளிகளுக்கும், இருளர் பழங்குடியினர் சான்று 206 பயனாளிகளுக்கும், இருளர் பழங்குடியினர் நலவாரிய அட்டை 77 பேருக்கும், கிராம நத்தம் வீட்டுமனை பட்டா 14 பேருக்கும், மருத்துவ காப்பீடு அட்டை 40 பேருக்கும், புதிய மின்னணு குடும்ப அட்டை 105 பேருக்கும், ஒரு நபருக்கு உள்பிரிவு பட்டா மாறுதல் என மொத்தம் 697 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு 697 பயனாளிகளுக்கு ரூ.13.81 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலமாக வழங்கினார்.

மேலும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக வேளாண் ஈடுபாடுகள் 4 பயனாளிகளுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக பயனாளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரத்து 580 வீதம் ரூ.55 ஆயிரத்து 800 மதிப்பிலான தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டன. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக மக்களை தேடி மருத்துவ திட்டத்தின்கீழ் 2 பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகங்களும், மாற்றுத்திறனாளி துறை சார்பாக 5 பேருக்கு தலா ரூ.7 ஆயிரத்து 800 வீதம் ரூ.39 ஆயிரம் மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலிகளிகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக 4 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் என மொத்தம் 222 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

முகாமில் கலந்துகொண்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பேசியதாவது:-

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்த முடியவில்லை. இனி மாதம்தோறும் ஒரு கிராமத்தில் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய்த்துறையை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொள்ளும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறும். இது பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் அவர்களின் துறை சார்ந்த என்னென்ன திட்டங்கள் பொது மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை விளக்குவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக இந்த முகாமில் சர்வதேச பெற்றோர் தினத்தையொட்டி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பாக பெண் குழந்தைகளின் பிறப்பை கொண்டாடும் வகையில் பெண் குழந்தைகள் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜன், தனி துணை கலெக்டர் கார்த்திகேயன், சுகாதார பணிகள் இணை இயக்குனர் இளங்கோவன், துணை இயக்குனர் ஜவஹர்லால், ஊத்துக்கோட்டை தாசில்தார் ரமேஷ், தனி தாசில்தார் லதா, துணை தாசில்தார் நடராஜன், பூண்டி ஒன்றிய குழு துணைத்தலைவர் மகாலட்சுமி மோதிலால், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் மூர்த்தி, பெரிஞ்சேரி ரவி, ஒன்றிய கவுன்சிலர்கள் ஞானமுத்து, யசோதா கோவிந்தசாமி, ஊராட்சி மன்ற தலைவர் முனிவேல் என பலர் கலந்து கொண்டனர்.


Next Story