பணம் மோசடி; போலீஸ் சூப்பிரண்டிடம் பெண்கள் புகார்
பணம் மோசடி குறித்து போலீஸ் சூப்பிரண்டிடம் பெண்கள் புகார் அளித்தனர்.
திருப்பாலைக்குடியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரளாக வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பாலைக்குடியை சேர்ந்த ஒருவர் ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் ஈட்டும் தொழில் செய்து வருவதாகவும், செல்போன் நிறுவனங்கள் நடத்தி வருவதாகவும் தன்னிடம் முதலீடு செய்தால் அதிக அளவில் லாபம் தருவதாகவும் கூறினார். அதை நம்பி எங்கள் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் லட்சக்கணக்கில் அவரிடம் முதலீடு செய்தோம். எங்கள் பகுதியில் மட்டும் ரூ.10 கோடிக்கு மேல் முதலீடாக பெற்றுள்ளார். ஆனால், அவர்களில் ஒரு சிலரை தவிர மற்றவர்களுக்கு அதற்கான லாபத்தொகையோ, அசல் தொகையையோ தரவில்லை. அவரிடம் கேட்டபோது தந்துவிடுவதாக தெரிவித்தவர்.
தற்போது தலைமறைவாகி விட்டார். அவரின் குடும்பத்தினர் மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, எங்களின் பணத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவாக உள்ளவரை கண்டுபிடித்து எங்களின் பணத்தை மீட்டு தரவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.