எம்.ஐ.டி. கல்லூரியில் அப்துல்கலாம் சிலை - கவர்னர் திறந்துவைத்தார்
குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரி வளாகத்தில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சிலையை கவர்னர் ஆர்.என். ரவி திறந்து வைத்தார்.
சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் எம்.ஐ.டி. கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் படித்த பலர், பல முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். குறிப்பாக மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், இக்கல்லூரியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால், அப்துல்கலாமின் பெருமையை போற்றும் வகையில், கல்லூரி வளாகத்தில் அப்துல்கலாம் சிலையை நிறுவ, முன்னாள் மாணவர்கள் சங்கம் முடிவு செய்தது. அதன்படி நிறுவப்பட்ட அப்துல்கலாம் சிலையை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, நேற்று காலை திறந்து வைத்தார்.
பின்னர் அப்துல்கலாம் சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்தார். அதைதொடர்ந்து கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கவர்னர் வழங்கினார்
அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
2047-ல் புதிய இந்தியா உருவாக ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உதவிகளை நாட்டுக்்காக செய்ய வேண்டும். அப்துல்கலாம் எளிமையான குடும்பத்தில் பிறந்து, பெரிய சாதனை புரிந்து இருக்கிறார். அவரை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு ஒவ்வொருவரும் சாதனை புரிய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில, அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் ஆர்.வேல்ராஜ் மற்றும் முன்னாள் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.