தேனியில் பரிதாபம்:மர்ம நபரை பிடிக்க முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு
தேனியில் மர்ம நபரை பிடிக்க முயன்ற போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திடீரென உயிரிழந்தார்.
ரோந்து பணி
தேனியில், மதுரை சாலையில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் எதிரே வசித்து வந்தவர் ரெங்கசாமி (வயது 54). இவர் தேனி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர், ரோந்து அலுவலராக நியமிக்கப்பட்டு இருந்தார். அதன்படி, அவர் மோட்டார் சைக்கிளில் ரோந்து சுற்றி வந்தார்.
நள்ளிரவில் சொக்கர் தெரு பகுதியில் மர்ம நபர் உலா வருவதாக அல்லிநகரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தேனி மற்றும் அல்லிநகரம் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது ரெங்கசாமி அந்த தெருவுக்குள் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மர்ம நபரை துரத்திச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் சாவு
அந்த வழியாக வந்த போலீசார் அவரை தூக்கி விட்டனர். அப்போது ரெங்கசாமி தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதனால் போலீஸ் ஏட்டுகள் காமுத்துரை, சவுந்தர்ராஜன் ஆகியோர் அவரை தேனியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதற்கிடையே மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரெங்கசாமி நேற்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து அவருடைய மனைவி சுமித்ரா (45) கொடுத்த புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரெங்கசாமிக்கு திவ்யதர்ஷினி என்ற மகளும், பாலமுரளி என்ற மகனும் உள்ளனர். அவர்கள் இருவரும் வெளிநாட்டில் மருத்துவப்படிப்பு படித்து வருகின்றனர்.