திருத்தணி முருகன் கோவிலில் அமைச்சர்கள் காந்தி, சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம்
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர்கள் காந்தி, சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
திருத்தணி,
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா அடுத்த மாதம் 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடைபெற உள்ளது. எனவே அனைத்து முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நேற்று திருத்தணி முருகன் மலைக்கோவில் தேவர் மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர்கள் பேசும்போது, திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா நடைபெறவுள்ள 5 நாட்களில் 24 மணி நேரமும் அறுசுவை உணவு பக்தர்களுக்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வழங்கப்படும். லட்சகணக்கில் மக்கள் கூடுகின்ற இந்த ஆடிகிருத்திகை தெப்ப திருவிழாவிற்கு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள், குடிநீர் வசதிகள், சுகாதார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனைகள் அதிகாரிகளுக்கு வழங்கினர்.
மேலும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி 142 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அறநிலைத்துறை ஆணையர் முரளீதரன், மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ்கல்யாண், அறநிலையத்துறை கூடுதல் இயக்குனர் திருமகள், வேலூர் இணை ஆணையர் ரமணி, முருகன் கோவில் துணை ஆணையர் விஜயா, திருத்தணி ஆர்.டி.ஒ. தீபா, துணை போலீஸ் சூப்பிரண்ட் விக்னேஷ் கலந்துகொண்டனர்.
வளர்ச்சி பணிகள்
இதைதொடர்ந்து அமைச்சர்கள் காந்தி, சேகர்பாபு ஆகியோர் நந்தி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆறுமுகசாமி கோவிலில் 49.50 லட்சத்தில் யானை மண்டபம், தணிகை இல்லத்தில் 34.60 லட்சத்தில் குடில்கள், மலைக்கோவில் செல்லும் படி வழியில் 27.50 லட்சத்தில் 3 நிழல் மண்டபம் கட்டுவதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர். மேலும் மலைக்கோவிலுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களின் வசதிக்காக பேட்டரி கார் பயன்பாட்டை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். மேலும் 99 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட குடில்கள், விரிவு படுத்தப்பட்ட அன்னதான குடத்தை பார்வையிட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.