சென்னையில் 32 கோவில்களில் சமபந்தி விருந்து திருவல்லிக்கேணியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
சென்னையில் 32 கோவில்களில் நடந்த சமபந்தி விருந்து நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றனர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி கோவிலில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டனர்.
சென்னை,
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா கொண்டாடப்படும் நாளில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் சென்னையில் உள்ள 32 கோவில்களில் நேற்று நடந்த வழிபாடு மற்றும் பொது விருந்தில் சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
அதன்படி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி கோவிலில் நடந்த சிறப்பு வழிபாடு மற்றும் வடை- பாயாசம், சர்க்கரை பொங்கல் ஆகியவற்றுடன் அறுசுவையான பொது விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் மேயர் ஆர்.பிரியா, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், அறநிலையத்துறை கமிஷனர் க.வீ.முரளீதரன் உள்ளிட்ட அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனனர். தொடர்ந்து 200 பேருக்கு வேட்டி- சேலை வழங்கப்பட்டது.
அதேபோல் தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் சபாநாயகர் அப்பாவு, அடையாறு ஆனந்த பத்மநாப சாமி கோவிலில் அமைச்சர் கே.என்.நேரு, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் அமைச்சர் ஐ.பெரியசாமி, திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பெசன்ட் நகர் மகாலட்சுமி கோவிலில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், வடபழனி முருகன் கோவிலில் அமைச்சர் தங்கம் தென்னரசு, இதில் கோவில் தக்கார் ஆதிமூலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேற்கு தாம்பரம் செல்வ விநாயகர் மற்றும் கோதண்டராமன் கோவிலில் அமைச்சர் சி.வி.கணேசன், வேளாச்சேரி தண்டீசுவரர் கோவிலில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருவொற்றியூர் தியாகராஜர் சாமி கோவிலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அரண்மனைக்கார தெருவில் உள்ள கச்சாலீசுவரர் கோவிலில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தம்பு செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், வில்லிவாக்கம் தாமோதர பெருமாள் கோவிலில் அரசு தலைமை கொறடா செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.