4 வீராங்கனைகளுக்கு அரசுப் பணி நியமன ஆணை வழங்கினார் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
601 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.16.31 கோடி மதிப்பில் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று உயரிய ஊக்கத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று ஊக்கத் தொகையை வழங்கினார்.
கோவாவில் 37-வது தேசிய விளையாட்டு போட்டி, தமிழ்நாட்டில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி, ஜெர்மனியில் 8-வது உலக அளவிலான குள்ள மனிதர்களுக்கான விளையாட்டு போட்டி, தாய்லாந்தில் உலக திறன் விளையாட்டு போட்டி, டெல்லியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டி, பன்னாட்டு அளவில் பில்லியர்ட்ஸ் போட்டி, ஆசிய சைக்கிளிங் போட்டி, பல்வேறு மாநிலங்களில் தேசிய நீச்சல் மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 601 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.16.31 கோடி மதிப்பில் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீதம் வேலைவாய்ப்பு ஒதுக்க வேண்டும் என்ற திட்டத்தின் கீழ் கால்பந்து வீராங்கனை எஸ். ரங்கநாயகி, வீல்சேர் பென்சிங் வீராங்கனை ஆர்.சங்கீதா. வூசு வீராங்கனைகள் பி.அகல்யா மற்றும் ஆர்.வெர்ஜின் ஆகியோர் வணிக வரி மற்றும் பத்திர பதிவு துறையில் இளநிலை உதவியாளராக அரசுப் பணி ஆணை வழங்கப்பட்டது.
விளையாட்டுப் போட்டியில் வென்ற பதக்கங்கள் விவரம் வருமாறு:-
37-வது தேசிய விளையாட்டு போட்டியில் வென்ற தங்கம் 19, வெள்ளி 26. வெண்கலம் 34 ஆக மொத்தம் 79 பதக்கங்களும். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் தங்கம் 38, வெள்ளி 21, வெண்கலம் 39, ஆக மொத்தம் 98 பதக்கங்களும் வென்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் தங்கம் 20, வெள்ளி 8, வெண்கலம் 14, ஆக மொத்தம் 42, 8-வது உலக அளவிலான குள்ள மனிதர்களுக்கான விளையாட்டு போட்டியில் தங்கம் 6. வெள்ளி 4, வெண்கலம் 6 ஆக மொத்தம் 16 பதக்கங்களும், தாய்லாந்தில் நடைபெற்ற உலக திறன் விளையாட்டு போட்டியில் தங்கம் 17, வெள்ளி 19, வெண்கலம் 12 ஆக மொத்தம் 48 பதக்கங்களும், தேசிய அளவிலான நீச்சல், ரோலர் ஸ்கேட்டிங்,பில்லியர்ட்ஸ் போட்டிகளில் தங்கம் 83, வெள்ளி 113, வெண்கலம் 111, ஆக மொத்தம் 307 பதக்கங்களும், பன்னாட்டு அளவில் நடைபெற்ற பில்லியர்ட்ஸ் போட்டிகளில் தங்கம் 1. வெள்ளி 2 ஆக மொத்தம் 3 பதக்கங்களும், ஆசிய சைக்கிளிங் போட்டியில் ஒரு வெள்ளி பதக்கமும், ஆக மொத்தம் 594 பதக்கங்களும் வென்றிருந்தது.
முன்னதாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
உங்களுடைய சாதனைகள் உயர்வது போல இந்த ஊக்கத் தொகையும் வருங்காலங்களில் நிச்சயமாக அதிகமாக்கப்படும். உங்கள் திறமைக்கு ஒரு அங்கீகாரமாக தான் இந்த உயரிய ஊக்கத் தொகை நம்முடைய அரசு திராவிட மாடல் அரசு வழங்கிக் கொண்டு இருக்கிறது. நம்முடைய திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு எப்படி மற்ற துறைகளிலும் இந்திய ஒன்றியத்திற்கே ஒரு வழிகாட்டியாக இருக்கின்றதோ, அதே போல விளையாட்டிலும் துறையும் இந்திய ஒன்றியத்திற்கும் ஒரு வழிகாட்டியாக அமைக்கத் தான் நாம் அனைவரும் பணியாற்றி கொண்டிருக்கிறோம். அரசு முயற்சிகளை எடுக்கின்றது. வாய்ப்புகளை வசதிகளை உங்களுக்கு ஏற்படுத்தி தருகின்றது. இவை அனைத்தையும் சரியாக பயன்படுத்தி நீங்கள் சாதனை படைக்கும் போது தான் அந்த முயற்சிக்கு ஒரு பலன் ஏற்படுகின்றது என்றார்.