தேனி அருகே அரசு விழாவில் ரூ.21¾ கோடியில் நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்


தேனி அருகே அரசு விழாவில் ரூ.21¾ கோடியில் நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
x
தினத்தந்தி 26 Oct 2023 3:00 AM IST (Updated: 26 Oct 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே அரசு விழாவில் ரூ.21¾ கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

தேனி

தேனி அருகே அரசு விழாவில் ரூ.21¾ கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய சமுதாயக்கூடத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார்.

விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 2 ஆயிரத்து 813 பயனாளிகளுக்கு ரூ.21 கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இவ்வளவு நாட்களாக நீங்கள் உங்களை குடும்பத்தலைவி என்று சொல்லி இருப்பீர்கள். இனிமேல் நீங்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளி என்று கம்பீரமாக சொல்லும் நிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்.

பெரியார் கனவு

பெண்ணுரிமை குறித்து பெரியார் கண்ட கனவுகளுக்கு எல்லாம் தி.மு.க. அரசு செயல்வடிவம் கொடுத்து வருகிறது. கருணாநிதி இதை தான் செய்தார். கருணாநிதியை தொடர்ந்து நம்முடைய முதல்-அமைச்சரும் மகளிர் முன்னேற்றத்துக்கான திட்டங்களை தினந்தோறும் நிறைவேற்றி வருகிறார்.

பெண்கள் முன்னேற்றம் 3 வடிவில் தடுக்கப்பட்டு இருக்கிறது என்றார் பெரியார். ஒன்று கலாசாரம் ரீதியாக தடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சட்டரீதியாக தடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பொருளாதார ரீதியாக தடுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று தடைகளையும் நீக்கினால் தான் பெண்கள் சுதந்திரமாக வாழ முடியும் என்று பெரியார் கூறியிருக்கிறார். அந்த வகையில் பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்தது தான் நம்முடைய திராவிட இயக்கம். பெண்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை தி.மு.க. அரசு தொடர்ச்சியாக செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தரேஷ், எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார், தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் மற்றும் அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஆய்வுக்கூட்டம்

விழாவை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் திட்டம் சார்பில் அமைக்கப்பட்ட சிறுதானிய உணவகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலக கூட்டரங்கில் அரசுத்துறை அலுவலர்களுடன் அமைச்சர் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் மாவட்டத்தின் அரசு திட்டங்களின் செயல்பாடுகள், புதிய திட்டப்பணிகள் செயல்படுத்துவது உள்பட பல்வேறு ஆய்வுகளை அவர் மேற்கொண்டார். அதன்பிறகு, தேனி என்.ஆர்.டி. நகரில் அமைக்கப்பட்ட கலைஞர் நூலகத்தை அவர் திறந்து வைத்தார்.


Next Story