தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் - பட்டம் வென்ற தமிழ்நாடு அணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழ்நாடு அணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
27-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மகளிர் கால்பந்து அணிகள் பங்கேற்று விளையாடின.
இதில், லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழக அணி அரையிறுதி அரையிறுதி போட்டியில் ரெயில்வே அணியை 3 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று 5 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக தமிழக அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் தொடரின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு - ஹரியானா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் ஹரியானா அணியை வீழ்த்தி தமிழ்நாடு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
5 ஆண்டுகளுக்கு பின்னர் தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டத்தை தமிழ்நாடு அணி கைப்பற்றி அசத்தியது.
இந்த நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு அணிக்கு தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
தேசிய சீனியர் மகளிர் கால்பந்தாட்ட சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழ்நாடு மகளிர் கால்பந்தாட்ட அணிக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 2 - 1 என்ற கோல் கணக்கில் ஹரியானாவை வீழ்த்தி தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித்தந்துள்ள சந்தியா, இந்துமதி உட்பட அத்தனை வீராங்கனையரையும் பாராட்டுகிறேன்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயின்ற வீராங்கனைகளை அதிகம் கொண்ட தமிழ்நாடு மகளிர் கால்பந்தாட்ட அணி, இன்னும் பல சாதனைகளை புரியட்டும். கழக அரசு அவர்களுக்கு துணை நிற்கும்.
இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.