கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வசதிகள் குறைவா? திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு


தினத்தந்தி 4 Jan 2024 8:56 AM IST (Updated: 4 Jan 2024 9:11 AM IST)
t-max-icont-min-icon

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கான வசதிகள் குறைவாக உள்ளது என புகார்கள் எழுந்துள்ளன.

சென்னை,

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கடந்த 30-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து விரைவு பேருந்துகள் உள்ளிட்ட அரசு பேருந்துகள் சேவை செயல்பட தொடங்கியது.

எழில்மிகு வடிவமைப்புடன் கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய தென்மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் இந்தப் பேருந்து நிலையத்தை பயன்படுத்துவதில் பயணிகளுக்கு பல சிரமங்கள் இருக்கின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு செல்ல கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், பொதுமக்களுக்கான வசதிகள் குறைவாக உள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பயணிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார். பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா, வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளுக்கு தேவையான மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தார்.

மேலும் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கழிவறைகளில் தண்ணீர் வசதிகள், நடைபாதைகள் முறையாக தூய்மை செய்யப்படுகிறதா என பார்வையிட்டார்.


Next Story