மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் எந்திரம் - அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்தார்
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் எந்திரத்தை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கிவைத்தார்.
சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக ரூ.18 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள காற்று மூலம் குடிநீர் தயாரிக்கும் எந்திரத்தை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கிவைத்தார்.
பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-
கோவில்களுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு நல்ல முயற்சிகள் எடுக்கக்கூடிய பணிகள் நடந்து வருவதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த அரசு செய்து வருகிறது. அந்தவகையில் கோவில்களில் முடிந்த அளவிற்கு கழிப்பிட வசதிகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், கோவிலினுடைய தூய்மை, வருகின்ற பக்தர்களிடம் சிறந்த முறையில் அன்பாக பேசுகின்ற வகையில் பணியாளர்களுக்கு பயிற்சி ஆகியவற்றை முன்னிறுத்தி இந்து சமய அறநிலையத்துறையில் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு பணிகள் சிறப்போடு நடைபெற்று வருகின்றன.
முதல்-அமைச்சர் தலைமையில் உள்ள தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் மல்லிகார்ஜூனன் சந்தானகிருஷ்ணன் முயற்சியால் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் காற்றிலிருந்து ஈரப்பதத்தை பெற்று அதை பாதுகாக்கப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட குடிநீராக மாற்றி கோவிலுக்கு வருகின்ற பக்தர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்ற ஒரு எந்திரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 500 லிட்டர் தண்ணீர் உற்பத்தியாகிறது.
உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீராகவும் பெறப்படுவதால் பக்தர்களுக்கு மிகவும் பயனாக இருக்கும். தொடர்ந்து, காளிகாம்பாள் கோவிலிலே இதுபோன்ற பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் எந்திரத்தை அர்ப்பணிப்பதாக மல்லிகார்ஜூனன் தெரிவித்துள்ளார்.
இந்த எந்திரம் தொடர்ந்து நல்ல பயனை தருமானால் முதுநிலை கோவில்கள் அனைத்திலும் இதுபோன்ற எந்திரத்தை நிறுவ இந்து சமய அறநிலைத்துறை முயற்சி எடுக்கும்.
சிதம்பரம் நடராஜர் கோவில் நகைகளை சரி பார்ப்பதற்கு ஆகஸ்ட் 2-வது வாரத்தில் தேதியை தருவதாக கூறி உள்ளனர். பொறுமையாக இருந்து, அவர்கள் கேட்ட நேரத்தை தருவதற்கு இந்து சமய அறநிலையத்துறை முன் வந்திருக்கிறது. அதன் பிறகு அவர்களுடைய நிலைப்பாட்டை பொறுத்து இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ., த.வேலு, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் பி சந்திரமோகன், இந்து சமய அறநிலை துறையின் உயர்மட்ட குழு உறுப்பினரும், உபயதாரருமான மல்லிகார்ஜூனன் சந்தானகிருஷ்ணன், இணை-கமிஷனர் காவேரி மற்றும் கோவில் அறங்காவல் குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.