மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர் சேகர்பாபு


மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர் சேகர்பாபு
x
தினத்தந்தி 11 Dec 2023 7:35 PM IST (Updated: 11 Dec 2023 9:57 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைச்சர் சேகர்பாபு நிவாரணம் வழங்கினார்.

சென்னை,

மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தமிழக அரசும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து மழைநீர் வெளியேற்றுதல், உணவு மற்றும் நிவாரண உதவிகள் வழங்குதல், நோய்த்தொற்று பரவாமல் தடுக்க மருத்துவ முகாம்கள் அமைத்தல் போன்ற பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னை, எழும்பூர் சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி, 99-வது வார்டு, மெக் நிக்கல் சாலை, சர்வோதயா காப்பகத்தில் உள்ள பெண்களுக்கும், புதிய பூபதி நகர், ஓசங்குளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 2,000 குடும்பங்களுக்கும், திருநங்கைகள் காப்பகத்தில் உள்ள திருநங்கைகளுக்கும் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி, 59-வது வார்டை சேர்ந்த டி.என்பி.எஸ்.சி சாலை, நாராயணப்பா சாலை, என்.எஸ்.சி.போஸ் சாலை, தேவராஜ் முதலியார் தெரு, மெமோரியல் ஹால் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மிக்ஜம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட 4,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில் மேயர் பிரியா, தயாநிதி மாறன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.ரவிச்சந்திரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



Next Story