மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக திருவிழா அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்


மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக திருவிழா அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 13 Oct 2023 2:00 AM IST (Updated: 13 Oct 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக திருவிழாவை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தொடங்கி வைத்தார்.

மதுரை

புத்தக திருவிழா

மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) ஆகியவற்றின் சார்பாக புத்தக திருவிழா நடக்கிறது. இதற்கான தொடக்க விழா நேற்று மாலை நடந்தது.

கலெக்டர் சங்கீதா தலைமையில், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ரிப்பன்வெட்டி புத்தகத்திருவிழாவை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், எம்.பி.சு.வெங்கடேசன், மேயர் இந்திராணி, கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், பபாசி தலைவர் வயிரவன், துணை மேயர் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசும் போது, புத்தக வாசிப்பு மனிதர்களின் சிந்தனையை மேம்படுத்துகிறது. சமுதாயத்தில் பணம் படைத்த செல்வந்தர்களை விட ஒரு எழுத்தாளருக்கு கிடைக்கும் மரியாதை அதிகம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் திருவள்ளுவர் எழுதிய சித்தனைகள் இன்றும் மக்களின் வாழ்விற்கான அறத்தை வலியுறுத்துகிறது என்றார்.

22-ந்தேதி வரை நடக்கிறது

இந்த புத்தக திருவிழாவானது வருகிற 22-ந்தேதி வரை நடக்கிறது. காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் இதனை பார்வையிடலாம். மேலும், 200-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் அரங்குகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல, கலை இலக்கியம் சார்ந்த தகவல்களை அறிந்து பயன்பெற ஏதுவாகவும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த சிறப்பு அரங்குகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான சிறார் பயிலரங்கம், மதியம் 2 மணி முதல் 3 மணி வரை குழந்தைகளுக்கான "சிறார் சினிமா", மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் கதை கூறும் "கதை கதையாம் காரணமாம்" போன்ற பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் பங்கேற்கும் "சிந்தனை அரங்கம்" நிகழ்ச்சி நடைபெற உள்ளன. மேலும், புத்தகத் திருவிழாவிற்கு வரும் அனைவரும் சுவையான, சுகாதாரமான சிற்றுண்டி உணவு வகைகளை உண்டு மகிழ உணவு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.


Next Story