மேடை, பந்தல் அமைக்கும் இடத்தை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு


மேடை, பந்தல் அமைக்கும் இடத்தை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
x

திருச்சியில் வருகிற 26-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான மேடை, பந்தல் அமைக்கும் இடத்தை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.

திருச்சி

திருச்சியில் வருகிற 26-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான மேடை, பந்தல் அமைக்கும் இடத்தை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.

வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பயிற்சி

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள பா.ஜனதா, காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. ஒவ்வொரு கட்சி தலைமை சார்பிலும் கட்சியை பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தி.மு.க.வில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பயிற்சி கூட்டமும் நடக்கிறது.

கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவையொட்டி தி.மு.க.வில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்தல், முழுமையாக பூத் கமிட்டி அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி தி.மு.க.வில் 2 கோடி உறுப்பினர்களை சேர்த்து ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, தலைமை கழகத்தால் சரிபார்க்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

இதனை தொடர்ந்து வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு மாநிலம் முழுவதும் தி.மு.க. மாவட்டங்களை 5 மண்டலங்களாக பிரித்து அதில் உள்ள ஒவ்வொரு மண்டல வாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி பாசறைக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி டெல்டா மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் திருச்சி ராம்ஜிநகர் கருமண்டபம் பகுதியில் வருகிற 26-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது.

கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதில் அரியலூர், பெரம்பலூர், கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை வடக்கு, தஞ்சை மத்திய, தஞ்சை தெற்கு, திருச்சி தெற்கு, மத்தியம், வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, வடக்கு ஆகிய 15 மாவடட்ங்களின் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்டத்துக்குட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதையொட்டி திருச்சி ராம்ஜிநகர் அருகே கூட்டம் நடைபெறவுள்ள இடத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மேடை அமைப்பது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


Next Story