தி.மு.க.வினர் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் தி.மு.க.வினர் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் சேர்க்கும் பணியில் தி.மு.க.வினர் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வாக்காளர் பட்டியல்
இந்திய தேர்தல் ஆணையம் 27.10.2023 அன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட உள்ளது. இதில் 01.01.2024 தேதியை அடிப்படையாக கொண்டு புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது. ஆகையால் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி எண்கள் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள புதிய வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வது, இடமாற்றம் செய்வது, இறந்தவர்கள் மற்றும் நிரந்தரமாக வெளியூரில் உள்ள வாக்காளர்களை நீக்கம் செய்வது ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் 01.01.2024 அன்று 18 வயது பூர்த்தியாக உள்ள புதிய வாக்காளர்களை அவசியம் சேர்க்க வேண்டும். புதியதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6, ஆதார் விவரம் சேர்ப்பதற்கு 6பி, பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7, எழுத்துப்பிழை, முகவரி மாற்றம் செய்தல் மற்றும் புதிய வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு படிவம் 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து 27.10.2023 முதல் 12.12.2023 வரை வாக்குச்சாவடி மையங்கள் அல்லது வாக்காளர் சேர்ப்புக்கான தாசில்தார் அலுவலகத்தில் வழங்கலாம்.
சிறப்பு முகாம்
இதற்காக நவம்பர் மாதம் 4, 5, 18, 19 ஆகிய 4 நாட்களும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம்களை பயன்படுத்தி வாக்காளர் சேர்ப்பு மற்றும் இதர பணிகளில் மாவட்ட, ஒன்றிய, பகுதி, பேரூர் நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள், நிர்வாகிகள், வார்டு, கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள், பூத் கமிட்டிஉறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து இந்த பணியை சிறப்பாக செய்ய வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்காளர் இறுதிப் பட்டியலாக இருப்பதால் வாக்காளர் சேர்ப்பில் அதிக முக்கியத்துவம் செலுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். ஆகையால் தி.மு.க.வினர் தீவிரமாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.