250 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்
திருச்செந்தூர், உடன்குடியில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் 250 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் திருச்செந்தூர் யூனியன் அலுவலகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் காயத்ரி வரவேற்று பேசினார். மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி திட்டவிளக்க உரையாற்றினார். விழாவில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 150 கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு, புடவை, வளையல், பூ, மஞ்சள், குங்குமம், தேங்காய், பழம், இனிப்பு வகைகள் அடங்கிய சீர்வரிசை பொருட்களை வழங்கினார். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான உணவு வழங்கப்பட்டது.
விழாவில், திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன், தாசில்தார் வாமனன், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், ஆணையாளர் கண்மணி, யூனியன் ஆணையாளர் ஆன்றோ, வட்டார வளர்ச்சி அலுவலர் பொங்கலரசி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாரியப்பன், தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் நகராட்சி கவுன்சிலர்கள் செந்தில்குமார், தினேஷ் கிருஷ்ணா, திருச்செந்தூர் நகர செயலாளர் வாள்சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா உடன்குடி பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடந்தது. உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங் தலைமை தாங்கினார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயாதுரை பாண்டியன் வரவேற்றார். திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி திட்ட விளக்க உரையாற்றினார். 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீதனப் பொருட்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் உடன்குடி யூனியன் ஆணையாளர்கள் ஜான்சிராணி, சுடலை, உடன்குடி பேரூராட்சி செயல் அலுவலர் பிரபா, பேரூராட்சி தலைவர் ஹீமைரா ரமீஸ் பாத்திமா, யூனியன் துணை தலைவர் மீராசிராசுதின், பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ், மாநில தி.மு.க. வர்த்தக அணி இணை அமைப்பாளர் உமரி சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேற்பார்வையாளர் மலர்கொடி சுகிர்தா நன்றி கூறினார்.