முருகன் கோவில்களில் வைகாசி விசாக திருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்


முருகன் கோவில்களில் வைகாசி விசாக திருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
x

முருகன் கோவில்களில் வைகாசி விசாக திருவிழா நேற்று நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர்,

முருகப்பெருமான் பிறந்த நாளான நேற்று சுவாமியை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். வைகாசி விசாகத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

இதேபோல் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதற்காக கடந்த சில நாட்களாக ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், பாத யாத்திரையாகவும் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் இருந்தனர்.

சிறப்பு அபிஷேகம்

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடந்தது.

இந்த விழாவை காண்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தனர். அதிகாலையில் இருந்து பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், புஷ்ப காவடி, இளநீர் காவடி, பால்குடம் எடுத்து வந்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் சிலர் அங்க பிரதட்சணம் செய்து சாமியை வழிபட்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

திருப்பரங்குன்றம், பழனி

திருப்பரங்குன்றத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு விசாக திருவிழாவையொட்டி சண்முகப்பெருமானுக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் நடைபெற்றது. அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

வைகாசி விசாக திருவிழாவையொட்டி, பக்தர்களின் 'அரோகரா' கோஷம் முழங்க பழனி முருகன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


Next Story