'மிக்ஜம்' புயல் எதிரொலி: 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை


மிக்ஜம் புயல் எதிரொலி: 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
x

கோப்புப்படம்

வட கடலோர பகுதிகளில் புயல் நெருங்கும் என்பதால், அந்த பகுதிகளில் காற்றுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று அதிகாலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புயலாக வலுவடைய இருக்கிறது. இந்த புயலுக்கு 'மிக்ஜம்' என பெயரிடப்பட உள்ளது.

தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழ்நாட்டின் வட கடலோர பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் நாளை (திங்கட்கிழமை) நிலவக்கூடும். அதன்பின்னர், கடலோர பகுதிகளையொட்டி வடக்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திர கடற்கரையை நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) காலை அடைந்து, நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்துக்கும் இடையே புயலாக கரையை கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நாளை தமிழ்நாட்டின் வட கடலோர பகுதிகளில் புயல் நெருங்கும் என்பதால், அந்த பகுதிகளில் காற்றுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. அதன்படி, வட கடலோர பகுதிகளில் வரும் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் மழை, காற்றுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். இதேபோல் திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.


Next Story