கர்நாடகாவில் பருவமழை தீவிரம்: 77 அடியாக உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்
நேற்று ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 6 அடி உயர்ந்து 77.36 அடியாக இருந்தது.
மேட்டூர்,
கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக 2 அணைகளில் இருந்தும் கடந்த 15-ந் தேதி முதல் தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த 2 வாரங்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கர்நாடக அணைகளுக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து அணைகளில் இருந்து தண்ணீரின் அளவு அதிகரித்தும், குறைத்தும் மாறி மாறி திறந்து விடப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 57,409 கனஅடி தண்ணீர் வந்தது. அணை நீர்மட்டம் 71 அடியாக இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு 76,794 கனஅடியாக அதிகரித்தது. அணை நீர்மட்டமும் 77.36 அடியாக உயர்ந்துள்ளது. அதாவது ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 6 அடி உயர்ந்தது.
இதற்கிடையே அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. மேலும் 93.45 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர்இருப்பு நேற்று 38 டி.எம்.சி.யாக உள்ளது குறிப்பிடத்தக்கது.