2026-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டம் மெட்ரோ ரெயில் பணிகள் தீவிரம் - அதிகாரிகள் தகவல்


2026-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டம் மெட்ரோ ரெயில் பணிகள் தீவிரம் - அதிகாரிகள் தகவல்
x

சென்னையில் வருகிற 2026-ம் ஆண்டுக்குள் மெட்ரோ ரெயில் பணிகளை முடிப்பதற்காக பணிகள் வேகம் எடுத்து உள்ளதாக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை

சென்னையில் 3 வழித்தடங்களில் ரூ.61 ஆயிரத்து 843 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது. இதில் 42.6 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இந்த பணியில் 23 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த பணிகள் அனைத்தையும் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

அதன்பிறகு சென்னை மாநகரில் 173 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 25 லட்சம் பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையில் இருக்கும். இது பொதுபோக்குவரத்து பயணங்களில் 25 சதவீதமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் வேகம் எடுத்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டெர்லிங் சாலை சந்திப்பில் மெட்ரோ ரெயில் நிலையத்தின் ஒரு பகுதியை கட்டுவதற்காக, அப்பகுதியிலுள்ள சாலையின் சில பகுதிகளில் தடுப்புகளால் தடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகரின் முக்கிய நகரங்களை மெட்ரோ ரெயில் இணைப்புகளுடன் இணைப்பதற்கான சுரங்கப்பாதை மற்றும் உயர்த்தப்பட்ட பாதைகளுக்கான கட்டுமானப் பணிகள் வருகிற மே மாதம் தொடங்க இருக்கிறது.

கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்காததால் மீதமுள்ள நிலையத்தின் கட்டுமான பணிகள் நடப்பாண்டின் பிற்பகுதியில் தொடங்க வாய்ப்புள்ளது. தற்போது சுரங்கப்பாதை நடக்க இருக்கும் பகுதிகளில் நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டிருக்கும் கேபிள்கள், குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

நுங்கம்பாக்கத்தில் ஸ்டெர்லிங் ரோடு சந்திப்பு மெட்ரோ மற்றும் நுங்கம்பாக்கம் ஆகிய 2 ரெயில் நிலையங்கள் இருக்கும். நுங்கம்பாக்கத்தில் இருந்து பெரம்பூர், அயனாவரம், புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி, சேத்துப்பட்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மந்தைவெளி, அடையாறு, திருவான்மியூர் மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவில் இருந்து சிறுசேரி வரை நேரடியாக ரெயிலில் பயணிக்கலாம்.

அதேபோல், மாதவரத்தில் இருந்து சிறுசேரி சிப்காட் வரையிலான 45.8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட 2-ம் கட்டப்பணியின் ஒரு பகுதியாக பழைய மாமல்லபுரம் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைந்துள்ள பகுதிகளில் 3-வது வழித்தடத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கும்.

ஸ்டெர்லிங் சாலை சந்திப்பில் மெட்ரோ ரெயில் பணிகளுக்காக அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தின் கட்டமைப்புகள் இடிக்கப்பட்டு உள்ளது. இப்பகுதியில் வருகிற மே மாதம் பணிகள் தொடங்க இருக்கிறது. ஸ்டெர்லிங் சாலை சந்திப்பின் ஒரு மூலையில் உள்ள பள்ளியில் சுமார் 17 ஆயிரத்து 491 சதுர அடி (1,625 சதுர மீட்டர்) நிலத்தையும், சுரங்க ரெயில் நிலையத்தை அமைப்பதற்காக மற்றொரு இடத்தில் உள்ள 3 ஆயிரத்து 961 சதுர அடி (368 சதுர மீட்டர்) நிலமும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மதிப்பீட்டைவிட அதிகமாக மேற்கோள் காட்டியதால் 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்டெர்லிங் ரோடு சந்திப்பு மெட்ரோ ரெயில் நிலையம் உள்பட 3-வது வழித்தடத்தில் உள்ள ராதாகிருஷ்ணன் சாலை முதல் அடையாறு சந்திப்பு வரை சுரங்கப்பாதை ரெயில் நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை மெட்ரோ ரெயில் நிறுவனம் ரத்து செய்தது. ஏலதாரர்கள் இல்லாததால் ரத்து செய்யப்பட்ட 6 முக்கிய ஒப்பந்தப்புள்ளியில் இதுவும் ஒன்றாகும். சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் நிறுவுவது, ரெயில் நிலையத்தின் கட்டுமானத்துடன் ஒத்துப்போவதற்காக இந்த இடங்களில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான காலக்கெடு மாற்றப்பட்டு உள்ளது. சுரங்கப்பாதை அமைக்க கூடுதலான நேரம் தேவைப்படும்.

ஆனால் உயர்த்தப்பட்ட பாதைகள் திட்டமிட்ட காலத்தில் முடிக்கப்படும். 2026-ம் ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டு உள்ளோம். இதனால் தற்போது அனைத்து பணிகளும் துரித கதியில் வேகம் எடுத்து உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story