ஜார்க்கண்டில் உயிரிழந்த மருத்துவ மாணவர் - ரூ.3 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்


ஜார்க்கண்டில் உயிரிழந்த மருத்துவ மாணவர் - ரூ.3 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்
x

ஜார்க்கண்டில் உயிரிழந்த மருத்துவ மாணவர் மதன்குமாரின் குடும்பத்திற்கு, ரூ.3 லட்சம் இழப்பீட்டிற்கான காசோலையை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூரைச் சேர்ந்த மதியழகன் என்பவரின் மகன் மதன்குமார் (வயது 28) ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள இராஜேந்திரா மருத்துவ கல்லூரியின் விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு தடயவியல் மருத்துவம் படித்து வந்தார். இந்த நிலையில் மதன்குமார் காணாமல் போய் பின்னர், அவரது உடல் எரிந்த நிலையில் சடலமாக அவர் தங்கி இருந்த விடுதியின் பின்புறத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அவரது உடல் விமான மூலம் கொண்டுவரப்பட்டு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு, தகனம் செய்யப்பட்டது. மதன்குமார் மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து ஜார்க்கண்ட் மாநில காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த மருத்துவ மாணவர் மதன்குமாரின் குடும்பத்திற்கு, ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில், நாமக்கல் வேலகவுண்டம்பட்டியில் உள்ள மதன்குமாரின் வீட்டிற்கு சென்ற அமைச்சர் மதிவேந்தன், 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது குடும்பத்தாரிடம் வழங்கினார். மேலும் அப்போது அவர், மதன்குமாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.


Next Story