தமிழ்நாட்டில் மாற்றத்தை மலரச் செய்யும் ஆண்டாக 2024-ம் ஆண்டு மலரட்டும் - ஓ.பன்னீர்செல்வம் புத்தாண்டு வாழ்த்து


தமிழ்நாட்டில் மாற்றத்தை மலரச் செய்யும் ஆண்டாக 2024-ம் ஆண்டு மலரட்டும் - ஓ.பன்னீர்செல்வம் புத்தாண்டு வாழ்த்து
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 31 Dec 2023 11:25 AM (Updated: 31 Dec 2023 11:29 AM)
t-max-icont-min-icon

அன்பு, அமைதி, எளிமை, சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவை வளரும் ஆண்டாக 2024 ஆம் ஆண்டு மலரட்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்து இருப்பதாவது:-

மலரும் ஆங்கிலப் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த இனிய நாளில், அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

பெருவெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள், சுகாதாரமற்ற சூழ்நிலை காரணமாக ஏற்பட்டுள்ள தொற்று நோய்கள் ஆகியவை அறவே நீங்கி, வாடி நிற்போர் எவருமில்லை என்ற நிலை உருவாகும் ஆண்டாக 2024 ஆம் ஆண்டு திகழட்டும்.

அகம்பாவம், ஆணவம், துரோகம், கொடூரச் சிந்தனை, நாகரிகமற்ற பேச்சு போன்றவை அகன்று, ஒழுக்கம் என்னும் மாளிகையைத் தாங்கி நிற்கும் தூண்களான அன்பு, அமைதி, எளிமை, சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவை வளரும் ஆண்டாக 2024 ஆம் ஆண்டு மலரட்டும். வலிமையான பாரதம், வளமான தமிழகம் உருவாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திட இந்தப் புத்தாண்டில் உறுதி ஏற்போம்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். தமிழ்நாட்டில் அந்த மாற்றத்தை மலரச் செய்யும் ஆண்டாக 2024 ஆம் ஆண்டு மலரட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story