மாரியம்மன் கோவில் தேர்திருவிழா

பாகலூரில் மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவில் 3 மாநில பக்தர்கள் பங்கேற்றனர்.
ஓசூர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூரில், 450 ஆண்டுகள் பழமையான, மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்திருவிழா கடந்த 22-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று தேரோட்டம் நடைபெற்றது. சிறப்பு யாகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, அலங்கரிக்கப்பட்ட தேரில், அம்மனை வைத்து, பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர். மேலும் அப்போது, பக்தர்கள் தேர் மீது உப்பு, மிளகு, வாழைப்பழம் வீசி நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில், பாகலூர், பேரிகை ஓசூர் மற்றும் 84 கிராம பொதுமக்களும் மற்றும் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என 3 மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு குடிநீர், மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி இன்று (சனிக்கிழமை) பல்லக்கு உற்சவமும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு பச்சை கரகமும் நடைபெறுகிறது.






