அருகே பட்டப்பகலில் பயங்கரம்:காதல் திருமணம் செய்ததால் புதுமாப்பிள்ளை ஆணவக்கொலை


அருகே பட்டப்பகலில் பயங்கரம்:காதல் திருமணம் செய்ததால் புதுமாப்பிள்ளை ஆணவக்கொலை
x

கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த மாமனார் குடும்பத்தினர் நடுரோட்டில் புதுமாப்பிள்ளையை அரிவாளால் வெட்டியும், கழுத்தை அறுத்தும் ஆணவக்கொலை செய்தனர். இந்த கொடூர கொலை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்

காதல் திருமணம்

கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன். இவருடைய மகன் ஜெகன் (வயது 28). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரும், கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த சங்கரின் மகள் சரண்யா (21) என்பவரும் காதலித்து வந்தனர்.

இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவசரஅவசரமாக மகளுக்கு வரன் பார்த்து திருமண ஏற்பாடு செய்தனர்.

இதனால் ஜெகன், சரண்யாவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் சரண்யாவின் குடும்பத்தினர் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தனர். ஒரு கட்டத்தில் ஜெகனை அவருடைய மாமனார் சங்கர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் கொன்று விட திட்டம் போட்டதாக தெரிகிறது.

சரமாரியாக வெட்டிக்கொலை

இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் புதுமாப்பிள்ளை ஜெகன் வேலைக்கு செல்வதற்காக மோட்டார்சைக்கிளில் புறப்பட்டார். தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் அணைரோடு மேம்பாலம் அருகே இணைப்பு சாலையில் (சர்வீஸ் ரோடு) ஜெகன் சென்று கொண்டு இருந்தார்.

இதை அறிந்த சரண்யாவின் தந்தை சங்கர் மற்றும் உறவினர்கள் 2 பேர் அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அவர்கள் ஜெகனை வழிமறித்து மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளினர். பின்னர் அவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக ஜெகனை வெட்டினர். மேலும் அரிவாளால் அவரின் கழுத்தை அறுத்தனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

அவரை கொலை செய்ததும் சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் 2 மோட்டார்சைக்கிள்களில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். ஜெகன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சாலை மறியல்

இது குறித்து அவர்கள் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே ஜெகன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஊர் மக்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் ஜெகனின் உடலை சாலையில் இருந்து எடுக்கவிடாமல் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

3 பேருக்கு வலைவீச்சு

தொடர்ந்து போலீசார் ஜெகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த ஆணவக்கொலை தொடர்பாக ஜெகனின் மாமனார் சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் 2 பேர் மீது காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகளின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாமனார் தனது உறவினர்களுடன் சேர்ந்து புதுமாப்பிள்ளையான மருமகனை நடுரோட்டில் வெட்டி ஆணவக்கொலை செய்த சம்பவம் கிருஷ்ணகிரி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெட்டிக்கொல்லும் வீடியோக்கள்

சமூக வலைதளங்களில் வைரலானது

காதல் திருமணம் செய்த ஜெகன், பெண்ணின் தந்தை சங்கரால் நேற்று ஆணவ கொலை செய்யப்பட்டார். நடுரோட்டில் அவரை மாமனார் மற்றும் உறவினர்கள் 2 பேர் சேர்ந்து கழுத்தை அறுத்தும், வெட்டியும் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நடந்த இந்த கொலையை அந்த வழியாக சென்றவர்கள் தங்களின் செல்போன்களில் தூரமாக இருந்தவாறு படம்பிடித்தனர். ஜெகனை ஒருவர் கால்களை பிடித்துக் கொள்ள, 2 பேர் சேர்ந்து சரமாரியாக அரிவாளால் வெட்டும் அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. பல்வேறு வாட்ஸ்-அப் குழுக்களிலும், சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

ஜெகனின் மரணத்திற்கு நீதி கேட்டு பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஜெகனின் குடும்பத்தினர், உறவினர்கள் நேற்று அங்கு திரண்டனர். அவர்கள் தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் உடலை எடுக்க விடாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து உடலை எடுத்து சென்றனர். இதனால் மதியம் 2 மணி முதல் 2.30 மணி வரையில் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

3½ ஆண்டுகளுக்கு பிறகு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்

மீண்டும் ஒரு ஆணவக்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூடுகொண்டப்பள்ளியில் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்ட நந்தீஸ்-சுவாதி தம்பதியினர் கடத்தப்பட்டு கொடூரமாக ஆணவக்கொலை செய்யப்பட்டனர். அவர்களின் உடல் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் காவிரி ஆற்றில் வீசப்பட்டது. அந்த கொலை தொடர்பாக பெண்ணின் தந்தை சீனிவாசன் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். 3½ ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு ஆணவக்கொலையை போன்று தற்போது மீண்டும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு ஆணவக்கொலை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story