51 அடியாக உயர்ந்த மஞ்சளாறு அணை நீர்மட்டம்:கரையோர கிராமங்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
தேவதானப்பட்டியில் உள்ள மஞ்சளாறு அணையின் நீா்மட்டம் 51 அடியாக உயர்ந்தது. இதனால் அணையின் கரையோர கிராமங்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஞ்சளாறு அணை
தேவதானப்பட்டியில் மஞ்சளாறு அணை அமைந்துள்ளது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 57 அடி ஆகும். இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 5 ஆயிரத்து 259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மஞ்சளாறு அணைக்கு கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக அக்டோபர் மாதம் 15-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம்.
இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையே பெய்யவில்லை. இதனால் கடந்த வாரம் வரை அணைக்கு நீர்வரத்து இன்றி காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் அணையின் நீர்மட்டம் 51 அடியாக உயா்ந்தது. அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியதும் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.
முதல்கட்ட வெள்ள அபாயம்
இதனால் அணையின் கரையோர கிராமங்களான தேனி மாவட்டம் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு குன்னுவாரங்கோட்டை ஆகிய பகுதியில் உள்ள கிராமங்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் அணையின் நீா்மட்டம் 53 அடியை எட்டியதும் 2-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 55 அடியை எட்டியதும் 3-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 128 கன அடியாக உள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் நீர்மட்டம் விரைவில் முழுக்கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திண்டுக்கல், தேனி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். நேற்று மஞ்சளாறு அணை பகுதியில் 11 சென்டி மீட்டர் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.