கள்ளக்குறிச்சியில் தொடர் மழை: மணிமுக்தா அணையில் வினாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, வினாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் நீர்நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில், கள்ளக்குறிச்சி அருகே அணைக்கரை கோட்டாலத்தில் உள்ள மணிமுக்தா அணைக்கும் நீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், 36 அடி கொள்ளளவு கொண்ட அணையில், தற்போது 34 அடி என்கிற நிலையில் நீர்மட்டம் உள்ளது. இந்த நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதியான கல்வராயன் மலை பகுதியில் பெய்த மழையால் மணிஆறு, முக்தா ஆறு மற்றும் பாப்பாக்கள் ஓடையின் வழியாக அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது.
நீர் திறப்பு அதிகரிப்பு
அதன்படி நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 500 கனஅடி நீர் வந்த நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி, உபரி நீராக அப்படியே மணிமுக்தாற்றில் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் மாலையில் நீர் வரத்தானது வினாடிக்கு 1000 கனஅடியாக அதிகாரித்தது. அந்த நீரும் அப்படியே உபரி நீராக ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
இதனால் மணிமுக்தாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து மழை பெய்த வருவதால், அணையை நீர்வளஆதரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதனால் மழை மேலும் தீவரமாகும் பட்சத்தில் நீர் திறப்பு மேலும் அதிகரிக்க கூடும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
நீர்நிலைகள்
இதேபோன்று, மாவட்டத்தில் பிற பகுதியில் உள்ள நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. அந்த வகையில், உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் கிராமத்தில் உள்ள ஏரி நிரம்பி வழிந்து வருகிறது. இதனால் அதை சார்ந்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.