100 மூட்டை சிமெண்டு வாங்கி பணம் தராமல் ஏமாற்றியவர் கைது
திருத்தணியில் 100 மூட்டை சிமெண்டு வாங்கி பணம் தராமல் ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டார்.
திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட சென்னை பைபாஸ் சாலை பகுதியில் வசிப்பவர் ஜெகதீஷ் (வயது 30). இவர் அதே பகுதியில் சிமெண்ட், எம் சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார்.
கடந்த 7-ந் தேதி ஜெகதீசனின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட நபர் ஒருவர் திருவள்ளூரில் சிமெண்ட் 100 மூட்டை தேவைப்படுவதாகவும், அதனை திருவள்ளூரில் பகுதியில் டெலிவரி செய்துவிட்டு பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு ஜெகதீஷிடம் கூறியுள்ளார்.
இதனை நம்பி ஜெகதீஷ் 100 மூட்டை சிமெண்ட்டை லாரியில் ஏற்றி சென்று திருவள்ளூரில் அந்த நபர் கூறிய இடத்தில் இறக்கினார். செல்போனில் தொடர்பு கொண்ட நபர் அங்கு இல்லை. ஜெகதீஷ் அவருக்கு போன் செய்து 100 மூட்டை சிமெண்டுக்கு பணம் கேட்டார்.
அதற்கு அந்த நபர் நான் வெளியே இருப்பதால் நாளை உங்கள் வங்கி கணக்கில் செலுத்துவதாக கூறினார். அவர் சென்னதுபோல பணம் வரவில்லை. சிமெண்டு மூட்டைகளை ஆடர் செய்த நபருக்கு போன் செய்தால் அவர் எடுக்கவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெகதீஷ் திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி ஜெகதீஷை ஏமாற்றிய சென்னை பட்டாளம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 28) என்பவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்.