தொலைதூர கல்வியில் முறைகேடு: மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் ஊழியர்கள் 8 பேர் மீது வழக்குப்பதிவு


தொலைதூர கல்வியில் முறைகேடு: மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் ஊழியர்கள் 8 பேர் மீது வழக்குப்பதிவு
x

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வியில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் காரணமாக 8 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மதுரை,

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலை நிலைக்கல்வி இயக்ககத்தில் மதிப்பெண் பட்டியல் வழங்குதல், மாணவர் சேர்க்கை, விடைத்தாள்கள் மாயம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடு புகார்கள் உள்ளன. இது தொடர்பாக மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இந்த முறைகேட்டில் கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன் உட்பட பல்கலைக்கழக அலுவலர்கள் கேரளா மைய ஒருங்கிணைப்பாளர்கள் அனுப்பிய கட்டண விவரத்தை ஆய்வு செய்யாமல் மாணவர் சேர்க்கை வழங்கியது. மேலும், மதிப்பெண் பட்டியல் வழங்கியதிலும் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக் கழக தொலை நிலைக்கல்வி முன்னாள் கூடுதல் தேர்வாணையர் எம். ராஜராஜன்( கடந்த ஆண்டு இறந்துவிட்டார்), மாணவர் சேர்க்கை பிரிவு முன்னாள் கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி, தேர்வு பிரிவு கணினி அலுவலர் கார்த்திகை செல்வன், இளநிலை வகுப்புகளுக்கான தேர்வு பிரிவு முன்னாள் கண்காணிப்பாளர் ராஜபாண்டி மற்றும் இப்பல்கலைக்கழக கேரள மையங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜிஜி, அப்துல் அஜிஸ், சுரேஷ், ஜெயபிரகாசன் ஆகிய 8 பேர் மீது மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் குமரகுரு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதில் முதல் குற்றவாளியான ராஜராஜன் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில் மற்ற

7 பேரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.


Next Story