சென்னை விமான நிலையத்தில் மதுரை விமானத்தில் கோளாறு; 4 மணி நேரம் தாமதம்


சென்னை விமான நிலையத்தில் மதுரை விமானத்தில் கோளாறு; 4 மணி நேரம் தாமதம்
x

சென்னை விமான நிலையத்தில் மதுரை செல்லும் விமானத்தில் எந்திரக்கோளாறால் 4 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

சென்னை

மீனம்பாக்கம்,

சென்னை மீனம்பாக்கம் காமராஜர் உள்நாட்டு விமான நிலையத்துக்கு மும்பையில் இருந்து தினமும் காலை 11 மணிக்கு வரும் விமானம், மீண்டும் சென்னையில் இருந்து மதுரைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு காலை 11.30 மணிக்கு புறப்பட்டு செல்லும். அந்த விமானம் மும்பையில் இருந்து நேற்று காலை 10.55 மணிக்கு சென்னை வந்தது.

இந்த விமானத்தில் மும்பையில் இருந்து மதுரை செல்வதற்கு 42 பயணிகளும், சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கு 76 பயணிகளும் என 118 பயணிகள் தயாராக இருந்தனர்.

ஆனால் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் எந்திரக்கோளாறு ஏற்பட்டு உள்ளது. எனவே விமானம் தாமதமாக பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் அனைவரும் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் பிற்பகல் 2 மணி ஆகியும் விமானம் பழுது பார்க்கும் பணி முடிவடையவில்லை.

இதனால் விமான நிலையத்தில் நீண்ட நேரமாக காத்திருந்த குழந்தைகளும், முதியோர்களும் பசி தாங்க முடியாமல் விமான நிறுவன அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளும், போலீசாரும், வாக்குவாதத்தில் ஈடுபட்ட விமான பயணிகளை சமாதானம் செய்தனர். பின்னர் பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறி அமரவைக்கப்பட்டனர்.

சுமார் 4 மணி நேரம் தாமதமாக மாலை 3.20 மணிக்கு சென்னையில் இருந்து மதுரைக்கு அந்த விமானம் புறப்பட்டு சென்றது. இதனால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story