ஆன்லைன் விளையாட்டு மூலம் பழக்கம்: மதுரை சிறுமியை மராட்டியத்திற்கு கடத்தி சென்ற வாலிபர் கைது..!
மதுரை அருகே பிரீபையர் விளையாட்டு மூலம் சிறுமியை திருமணம் செய்வதாக கூறி மராட்டிய மாநிலத்திற்கு கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:
மதுரையை அடுத்த பசுமலையை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் செல்போனில் பிரீபைபயர் என்னும் ஆன்லைன் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.
இந்த நிலையில் மராட்டிய மாநிலம் ராஜ்கோட் பகுதியை சேர்ந்த செல்வா (வயது 21) உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் செல்வா அந்த சிறுமியிடம் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அந்தவார்த்தைக்கு மயங்கிய சிறுமி செல்வா பேச்சை நம்பி அவருடன் கடந்த ஆண்டு டிசம்பர் 20-ந்தேதி மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்றுள்ளார்.
சிறுமியின் பெற்றோர்கள் வீட்டில் இருந்த தன் மகளை காணாததால் பல இடங்கள் தேடி கிடைக்காததால் திருப்பரங்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு செய்து சிறுமியை பல இடங்களில் தேடினர். மேலும் சிறுமியின் செல்போன் எண்ணைவைத்து அவர் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு உரிய இடத்திற்கு சென்றனர்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 4-ந்தேதி அன்று செல்வா போலீஸ் தன்னை தேடி வருவதை அறிந்து புனே ரெயில்வே நிலையத்தில் அந்த சிறுமியை விட்டுவிட்டு தப்பிச் சென்றார். இதற்கிடையில் போலீசார் அந்த சிறுமியை மீட்டு திருப்பரங்குன்றம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்
இதற்கிடையில் கடந்த 2 மாதமாக தேடப்பட்ட செல்வா மராட்டிய மாநிலம் ராஜ்கோட் ரெயில்வே காலணி பகுதியில் தங்கி இருப்பதாக தகவல் வந்தது.
இதனையடுத்து திருப்பரங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரி தலைமையில 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் மராட்டிய மாநிலத்திற்கு சென்று சிறுமியை ஏமாற்றிய செல்வாவை கைது செய்து விசாரணை செய்தனர். அதில் செல்வாவின் பெற்றோர்களுக்கு கடலூர் மாவட்டம் டி.புடையூர். சொந்த ஊர் என்றும், தமிழில் பேசுவதால் செல்வாவிற்கு அந்த சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டது தெரிய வந்தது.