அமணலிங்கேஸ்வரர் கோவிலில் 18-ந் தேதி மகாசிவராத்திரி விழா


அமணலிங்கேஸ்வரர் கோவிலில் 18-ந் தேதி மகாசிவராத்திரி விழா
x

அமணலிங்கேஸ்வரர் கோவிலில் 18-ந் தேதி மகாசிவராத்திரி விழா

திருப்பூர்

தளி

திருமூர்த்தி மலை அமணலிங்கேசுவரர் கோவிலில் 18-ந் தேதி மகா சிவராத்திரி விழாவின் போது விடிய விடியகலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிவராத்திரி

உடுமலை அருகே இயற்கை எழில் சூழ்ந்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். அது தவிர கோவில் வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சப்த கன்னியர், நவகிரகங்கள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்கள். கோவிலில் அமாவாசை, பிரதோஷம், கார்த்திகை உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

ஆனாலும் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வருகின்ற மகா சிவராத்திரி விழா பொதுமக்கள் மற்றும் ஆன்மிகவாதிகளால் கோலாகலமாக கொண்டாடப்பட்டுகிறது. அந்த வகையில் வருகின்ற 18-ந் தேதி மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. விழாவின் முதல் நாள் நிகழ்வாக பூலாங்கிணரில் புதுப்பிக்கப்பட்டு வரும் சப்பரத்திற்கு முன்னதாக 17-ந் தேதி இரவு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பின்னர் 18-ந் தேதி காலை மேல தாளங்களுடன் ஊர்வலமாக புறப்படும் மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள சப்பரம் வேலூர், வாளவாடி, தளி வழியாக மாலை 4 மணிக்கு கோவிலை வந்து அடைகிறது. இரவு 8 மணிக்கு முதல் கால பூஜையும், 10 மணிக்கு இரண்டாம் காலபூஜையும் நடைபெற உள்ளது.

கலை நிகழ்ச்சி

19-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், அதை தொடர்ந்து நான்காம் கால பூஜையும் நடைபெற உள்ளது. 5 மணிக்கு சிறப்பு அலங்காரம், சோடச உபசார தீபாராதனை நடைபெற உள்ளது. பொதுமக்கள் சிவராத்திரி விழாவில் கண்விழித்து சிவன் அருளை பெறுவதற்கு ஏதுவாக நாட்டியாஞ்சலி, கிராமிய நிகழ்ச்சி, பட்டிமன்றம், ஆன்மிக கலாசார பல்சுவை நிகழ்ச்சி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. கோவிலுக்கு வருகை தருகின்ற பக்தர்களுக்கு தேவையான அடிப்படை அத்தியாவசிய தேவைகள் மற்றும் விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் அமரநாதன் தலைமையிலான கோவில் நிர்வாகத்தினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.

இதேபோன்று தளி, உடுமலை பகுதியில் உள்ள சிவாலயங்கள் சிவராத்திரி விழாவிற்காக தயாரகி வருகிறது.அத்துடன் விவசாயிகளும் தங்களது நிலத்தில் விளைந்த கொத்துமல்லி, நெல், கொண்டைக்கடலை உள்ளிட்ட தானியங்களை சப்பரத்துக்கு படைத்து வரவேற்பதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.


1 More update

Related Tags :
Next Story