சிவாலயங்களில் திரண்ட பக்தர்கள் விடிய விடிய வழிபாடு
மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோவில்களில் நான்கு காலங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
சென்னை,
மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி விழா மகா சிவராத்திரி விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம்.
மகா சிவராத்திரி அன்று சிவன் கோவில்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை வரை நான்கு காலங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
அதன்படி மகாசிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் உள்ள சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது.
மகாசிவராத்திரி பூஜையான இரவு 9 மணி, நள்ளிரவு 12 மணி, அதிகாலை 2 மணி, 4 மணி என நான்கு காலமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.
திருவள்ளூரில் மகா சிவராத்திரியை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ பொம்மியம்மாள் சமேத முக்தீஸ்வரர் ஆலயத்தில் 41 அடி உயர சிவலிங்கத்துக்கு ராட்சத கிரேன் மூலம் 1008 பால்குட அபிஷேகம் செய்யப்பட்டது.
திருவண்ணாமலையில் மகா சிவராத்திரி முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள முதன்மை ஸ்தலமாக விளங்கும் பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் சிவராத்திரியை ஒட்டி கோவில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவிலில் உள்ள அனைத்து சிவ லிங்கங்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து மாலைகள் அணிவித்து பக்தர்களின் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரவு முழுவதும் ஏராளமான சிவ பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு வருகின்றனர்.
சிவராத்திரியை ஒட்டி காஞ்சிபுரத்தில் உள்ள சித்தீஸ்வரர், முத்தீஸ்வரர், வழக்கருத்தீஸ்வரர், கச்சபேஸ்வரர், கைலாசநாதர், அயிராவதீஸ்வரர், காளத்தீஸ்வரர், திருமூர்த்திஸ்வரர், செவ்வந்திஸ்வரர், சுக்கிலேஸ்வரர்,ஓண காந்தேஸ்வரர், ஸ்ரீ கந்தேஸ்வரர், ஸ்ரீ வாணேஸ்வரர், ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர், அபிராமேஸ்வரர், மங்களேஸ்வரர்,ராமநாத ஈஸ்வரர்,ஸ்ரீ மிருதஞ்ஜேஸ்வரர்,ஸ்ரீ பஞ்சமுகஸ்வரர், மகாலிங்கேஸ்வரர் உள்ளிட்ட 108 சிவாலயங்களிலும் திரளான பக்தர்கள் இரவு முழுவதும் ஓம் நமச்சிவாயா மந்திரங்களை ஓதியவாறு தங்கள் குடும்பத்தினுடன் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சிவராத்திரியொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைப்பெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதும், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான பிரகதீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் கங்கை நதிக்கரை வரை படையெடுத்து வெற்றி பெற்றதன் நினைவாக கலைநயத்துடன் இந்த கோவில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும். மேலும் உலக புராதன சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட இக்கோவில் சிறந்த ஆன்மீக சுற்றுலாதலமாகவும் விளங்கி வருகிறது.சிவராத்திரியை முன்னிட்டு நேற்று 7 ந்தேதி வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரையிலும்,நேற்று இரவு வரை நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது.
வேலூர் கோட்டை அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு ருத்ராபிஷேகம் காலசந்தி பூஜை நடைபெற்றது. 9 மணிக்கு 1008 வலம்புரி சங்கு பூஜை, ஹோமமும், தொடர்ந்து 11 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.
பிற்பகல் 3.30 மணி அளவில் விநாயகர் அபிஷேகம், தீபாராதனை, வெங்கடேச பெருமாள், ஸ்ரீ முருகர், ஸ்ரீ அம்மன் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா பிரதோஷ அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. சிவராத்திரியை முன்னிட்டு கால பூஜைகளும் நடந்தது. தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும், பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
இதையொட்டி ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து விடிய விடிய சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் ஏராளமானவர்கள் வந்ததால் வேலூர் கோட்டை பகுதி பரபரப்பாக காணப்பட்டது. கோட்டை முழுவதும் பக்தர்கள் திரண்டு இருந்தனர். மாலை வேளையில் பூங்காவிலும் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் அமர்ந்திருந்தனர். மேலும் வாகனங்கள் நிறுத்துவதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோவில் மற்றும் கோட்டையின் ஆங்காங்கே போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இதேபோல வேலூரில் உள்ள பல சிவன் கோவில்களில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜைகளில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.