மற்ற எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளைவிட மதுரை எய்ம்ஸ் முற்றிலும் மாறுபட்டது - அண்ணாமலை
“மற்ற மாநில எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளைவிட மதுரையில் அமையும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி முற்றிலும் மாறுபட்டது” என அண்ணாமலை பேசினார்.
பாதயாத்திரை
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண்-என் மக்கள்' பாதயாத்திரை மதுரை மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக நடந்தது. இதையொட்டி மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட யோகநரசிங்க பெருமாள் கோவில் வாசலில் இருந்து அண்ணாமலை நடைபயணம் தொடங்கினார். பெண்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். இதனைதொடர்ந்து நரசிங்கம் சாலை வழியாக தொண்டர்களுடன் நடந்து வந்த அவர், ஒத்தக்கடை பஸ் நிறுத்தத்தில் பேசியதாவது:-
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அது போல் மதுரை கிழக்கு தொகுதியை எடுத்துக்கொள்ளலாம். கிழக்கு தொகுதியில் நடப்பதுபோல் தமிழகத்தில் உள்ள எல்லா தொகுதிகளிலும் ஊழல் நடக்கிறது. அமைச்சர் மூர்த்தி செய்யாத ஊழலே கிடையாது. பத்திரப்பதிவு துறையில் இடமாற்றத்திற்கு ஒரு லஞ்சம், அதனை நிறுத்தி வைப்பதற்கு லஞ்சம் என அவர் சார்ந்துள்ள துறையில் செய்யாத ஊழலே கிடையாது. விஞ்ஞான முறையிலும் ஊழல் செய்து வருகிறார்.
எய்ம்ஸ் ஆஸ்பத்திரி
தமிழகத்திற்கு ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் நலத்திட்டங்கள் வந்துள்ளன. சாதாரண மக்களுக்கும் இன்சூரன்ஸ் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தி வைத்தவர், மோடி.
இந்தியாவில் உள்ள மற்ற எய்ம்ஸ்களை காட்டிலும் மதுரை எய்ம்ஸ் முற்றிலும் மாறுபட்டது. மற்ற மாநிலங்களில் இருக்கும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகள், டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் விரிவாக்கம் ஆகும். ஆனால், தென் இந்தியாவில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளின் மையமாக மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைய இருக்கிறது.
மற்ற மாநிலங்களில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகள் அமைக்க ரூ.600, ரூ.700 கோடி செலவு செய்யப்பட்டது. ஆனால் மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு ரூ.2600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2026-ல் மதுரை எய்ம்ஸ் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இந்த மருத்துவமனை வந்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தென் இந்தியாவின் முக்கிய சிகிச்சை மையமாக விளங்கும் வகையில் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
"மாலை, பொன்னாடை வேண்டாம்"
மதுரையில் அண்ணாமலை நடைபயணத்தின் போது, அவருக்கு வழிநெடுகிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அவருக்கு 129 மாலைகள் அணிவித்ததாகவும், 350-க்கும் மேற்பட்ட பொன்னாடைகள் போர்த்தியதாகவும் தெரிவித்தார். இது கட்சி நிகழ்ச்சிக்கு அப்பாற்பட்டது. எனவே, வரும் நாட்களில் மாலை, பொன்னாடை போன்றவை வேண்டாம். அதனால் காலமும், பணமும் விரயமாகிறது. அந்த பணத்தில் ஏழைகளுக்கு உணவு வாங்கிக்கொடுக்கலாம் என கட்சியினரை அண்ணாமலை அறிவுறுத்தினார்.