அரியலூரில் வேகமாக பரவும் 'மெட்ராஸ் ஐ'


அரியலூரில் வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ
x

அரியலூரில் ‘மெட்ராஸ் ஐ' வேகமாக பரவுவதால் சிகிச்சை அளிக்க அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டு தொடங்கப்பட்டுள்ளது.

அரியலூர்

'மெட்ராஸ் ஐ'

அரியலூர் நகரில் கடந்த ஒரு வாரமாக 'மெட்ராஸ் ஐ' எனும் கண் நோய் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கண் ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்த நோய் கண்ணில் கன்சங்டிவா என்ற விழி வெண் படலத்தில் ஏற்படும் நோயாகும். இது அடினோ வைரஸ் என்ற கிருமியினால் வருகிறது. முதன்முதலில் சென்னை எழும்பூர் பிராந்திய கண் மருத்துவமனையில் இது கண்டறியப்பட்டதால், இதனை 'மெட்ராஸ் ஐ' என்று அழைக்கிறோம். இந்த நோய் பற்றி அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவு தலைமை டாக்டர் கொளஞ்சிநாதன் கூறியதாவது:-

அரியலூர் மட்டுமல்லாது தமிழகம் முழுவதுமே 'மெட்ராஸ் ஐ' என்ற வைரஸ் கிருமியால் பாதிக்கப்படும் கண் நோய் வேகமாக பரவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் எரிச்சல், அரிப்பு, கூச்சம், அதிக வெளிச்சத்தை பார்க்க முடியாது போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது

இந்த நோய் 7 நாட்கள் முதல் 21 நாட்கள் வரை நீடிக்கும். இந்த நோய் உள்ளவர்கள் தானாக மருந்துகள் வாங்கி கண்களில் போடக்கூடாது. கண் மருத்துவரிடம் சென்று அவர்களிடம் சிகிச்சை பெற வேண்டும். இந்த நோய் வந்தவர்கள் பயம் கொள்ள வேண்டாம். எந்த பாதிப்பும் ஏற்படாது. கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது, பொது இடங்களுக்கு செல்லாமல் இருப்பது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு கண் நோய் பாதித்தால் பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மற்ற நோயாளிகளை பாதிக்காத வகையில் 'மெட்ராஸ் ஐ' நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டு தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story