வரத்து குறைவு எதிரொலி: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்தது - பழங்களின் விலையும் அதிகரித்தது


வரத்து குறைவு எதிரொலி: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்தது - பழங்களின் விலையும் அதிகரித்தது
x

வரத்து குறைவு எதிரொலியாக, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்தது. மேலும் பழங்களின் விலையும் அதிகரித்திருக்கிறது.

சென்னை

சென்னையின் முக்கிய வணிக சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நகரின் சில பகுதிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் விற்பனைக்காக காய்கறி எடுத்து வரப்படுகிறது. இங்கிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கும், திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும் காய்கறி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறி வரத்து குறைந்து இருக்கிறது. இதன் தாக்கம் காய்கறி விலையில் எதிரொலித்துள்ளது. இதனால் காய்கறி விலை கடந்த வாரத்தை காட்டிலும் சற்று உயர்ந்துள்ளது.

இதுகுறித்து சென்னை கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் அப்துல் காதர் கூறியதாவது:-

காய்கறி விலையை பொறுத்தவரையில் தக்காளி, முட்டைகோஸ் உள்ளிட்ட பல காய்கறி அடிமாட்டு விலைக்கு வந்துவிட்டது. லாரி வாடகை, ஆட்கள் கூலி காரணமாக விளைந்த காய்கறியை எடுத்து விற்பனைக்கு கொண்டு வருவதற்கே விவசாயிகள் தயங்குகிறார்கள். இதனால் கடந்த 2 மாதங்களாகவே காய்கறி வரத்து குறைந்து கொண்டிருக்கிறது.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமான காய்கறி வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறி விலை உயர்ந்திருக்கிறது. கடந்த வாரம் ரூ.50-க்கு விற்பனையான (கிலோவில்) பீன்ஸ் தற்போது ரூ.70-க்கும், ரூ.30-க்கு விற்பனையான அவரைக்காய் தற்போது ரூ.60-க்கும் விற்பனை ஆகிறது. கத்தரிக்காய், கேரட் விலை ரூ.10 வரையிலும், முருங்கைகாய் விலை ரூ.20 வரையிலும் அதிகரித்துள்ளது. இஞ்சி விலையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. பல காய்கறிகளின் விலை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்திருக்கிறது. வரத்து சீராகும் பட்சத்தில் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறி விலை நிலவரம் வருமாறு:- (மொத்தவிலையில்/கிலோவில்)

பீன்ஸ்- ரூ.70, அவரை- ரூ.60, பாகற்காய் (பன்னீர்) - ரூ.20 முதல் ரூ.25 வரை, பாகற்காய் (பெரியது) - ரூ.30, கத்தரி- ரூ.20 முதல் ரூ.25 வரை, வெண்டை- ரூ.15, புடலங்காய்-ரூ.20, சுரைக்காய்-ரூ.25, பீர்க்கங்காய்-ரூ.30, பச்சை மிளகாய்-ரூ.20 முதல் ரூ.25 வரை, பீட்ரூட்-ரூ.20 முதல் ரூ.30 வரை, கேரட் (ஊட்டி) - ரூ.40, கேரட் (மாலூர்) -ரூ.20 முதல் ரூ.25 வரை, முள்ளங்கி- ரூ.25, முட்டைக்கோஸ்- ரூ.10, இஞ்சி (பழையது) - ரூ.250, இஞ்சி (புதியது) - ரூ.80 முதல் ரூ.120 வரை, சாம்பார் வெங்காயம் - ரூ.80 முதல் ரூ.90 வரை, பல்லாரி வெங்காயம் (நாசிக்) - ரூ.32, பல்லாரி வெங்காயம் (ஆந்திரா) - ரூ.20 முதல் ரூ.22 வரை, தக்காளி- ரூ.10 முதல் ரூ.12 வரை, சேனைக்கிழங்கு- ரூ.40 முதல் ரூ.45 வரை, சேப்பங்கிழங்கு- ரூ.25, காலிபிளவர் (ஒன்று) - ரூ.30 முதல் ரூ.40 வரை, முருங்கைக்காய்- ரூ.80, உருளைக்கிழங்கு- ரூ.25 முதல் ரூ.30 வரை, எலுமிச்சை- ரூ.80 முதல் ரூ.90 வரை.

காய்கறி போலவே பழங்களின் விலையும் அதிகரித்திருக்கிறது. இதுகுறித்து சென்னை கோயம்பேடு மார்க்கெட் அண்ணா அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்க தலைவர் பழக்கடை கே.ஜெயராமன் கூறியதாவது:-

விவசாயிகள் இடையே காணப்படும் மாறுபட்ட கருத்து மற்றும் கர்நாடகா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பழங்கள் ஏற்றிவர டிரைவர்கள் காட்டும் தயக்கம் உள்ளிட்ட காரணங்களால் பழங்கள் வரத்து குறைந்திருக்கிறது. இதனால் பழங்கள் விலை அதிகரித்திருக்கிறது.

கடந்த வாரத்தை காட்டிலும் மாதுளை விலை ரூ.30 உயர்ந்துள்ளது. கொய்யா விலை ரூ.20 அதிகரித்திருக்கிறது. இதர பழங்களின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை சீசன் வருகிற 15-ந்தேதி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அவல், பொரி உள்ளிட்ட பொருட்களும் வரத்தொடங்கி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆப்பிள் (சிம்லா) - ரூ.120 முதல் ரூ.200 வரை, ஆப்பிள் (காலா) - ரூ.400 வரை, ஆப்பிள் (இம்போர்ட்டட்) - ரூ.200 முதல் ரூ.220 வரை, மாதுளை- ரூ.150 முதல் ரூ.250 வரை, சாத்துக்குடி- ரூ.50 முதல் ரூ.70 வரை, ஆரஞ்சு (கமலா - நாக்பூர்) - ரூ.40 முதல் ரூ.60 வரை, சப்போட்டா- ரூ.40, கொய்யா- ரூ.70 முதல் ரூ.80 வரை, அன்னாசி- ரூ.60 முதல் ரூ.80 வரை, வாழை (தார்) ரூ.200 முதல் ரூ.400 வரை, பட்டர் புரூட்- ரூ.120 முதல் ரூ.130 வரை, சீதாப்பழம்- ரூ.40 முதல் ரூ.50 வரை.

கார் வாடகை, ஆட்கள் கூலி உள்ளிட்ட காரணங்களால் வெளிச்சந்தைகளில் காய்கறி-பழங்கள் விலை ரூ.15 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story