தரமற்ற தார்ச்சாலை அமைத்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
தரமற்ற தார்ச்சாலை அமைத்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
தளி
சின்னவாளவாடியில் தரமற்ற தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
தார்ச்சாலை
உடுமலையை அடுத்த பெரியவாளவாடி ஊராட்சி உட்பட்ட பகுதியில் பெரியவாளவாடி, சின்னவாளவாடி, பழையூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இங்கு விவசாயம் பிரதான தொழிலாகும். இந்த நிலையில் சின்னவாளவாடி கிராமம் கிருஷ்ணர் கோவில் அருகில் இருந்து புறப்பட்டு சர்க்கார்புதூரை சென்றடையும் தார் சாலை சேதமடைந்து விட்டது.இதனால் விவசாயிகள் சாகுபடி பணிகளுக்கு இடுபொருட்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.
அத்துடன் விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கும் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வந்தனர். மேலும் தோட்டத்து சாலையில் வசித்து வருகின்ற பொதுமக்கள் சேதமடைந்த சாலையை போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டு வந்தது.அதைத்தொடர்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் புதிதாக சாலை அமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.அதன் பேரில் ரூ. 49 லட்சத்து 80 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பொதுமக்கள் புகார்
அதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் சாலை அமைக்கும் பணி தொடங்கி கடந்த மாதம் நிறைவு பெற்றது. இந்த சாலை அவசரகதியில் தரமற்ற வகையில் அமைக்கப்பட்டு உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
நீண்ட நாட்களுக்கு நிலைத்து நின்று பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய அடிப்படை தேவைகளில் சாலையும் ஒன்று. ஆனால் புதிதாக அமைக்கப்படும் சாலை தரமானதாகவும் இருபுறமும் மழைநீர் வடிகால் வசதி கொண்டதாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்களால் தொடர்ந்து பயன்படுத்த இயலும். ஆனால் சின்ன வாளவாடி பகுதியில் அமைக்கப்பட்ட தார்ச் சாலை தரமற்றதாக உள்ளதால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த சாலை அமைக்கும் பணி நிறைவுற்று முழுமையாக ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்கு உள்ளாகவே சாலை குண்டும் குழியுமாக மாறி சேதம் அடைந்து வருகிறது. இதனால் சாலை அமைக்கப் பட்டதற்கான நோக்கமும் பொதுமக்களின் வரிப்பணமும் வீணாகி உள்ளது. அதிகாரிகள் சாலை அமைக்கும் பணியை முறையாக ஆய்வு செய்யாததே இதற்கு காரணமாகும். அதனை சாதகமாகக் கொண்டு தரமற்ற சாலையை அமைத்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் சின்னவாளவாடி பகுதியில் அமைக்கப்பட்ட தார்சாலையை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் முதல் அமைச்சர் உடுமலைப் பகுதிக்கு வருகை தரும்போது இது குறித்து நேரில் புகார் அளிக்கவும் முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.