தமிழ்நாட்டை பார்த்து தான் பல்வேறு மாநிலங்கள் சமூக நீதியை வழங்கி வருகின்றன - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டை பார்த்து தான் பல்வேறு மாநிலங்கள் சமூக நீதியை வழங்கி வருகின்றன என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,
டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் 2-வது தேசிய மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
திமுகவின் அடிப்படையே சமூக நீதி தான். சமூக நீதி, சமதர்ம சமுதாயம் அமைக்கவே திராவிட இயக்கம் தோன்றியது. தமிழ்நாட்டில் நடந்த போராட்டத்தால்தான் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் முதல்முறையாக திருத்தப்பட்டது. தமிழ்நாட்டை பார்த்து பல்வேறு மாநிலங்கள் சமூக நீதியை வழங்கி வருகின்றன. சமூக நீதியை நிலைநாட்ட திமுக தொடர்ந்து போராடும்.
சமூக நீதியை பாஜக முறையாக அமல்படுத்தவது இல்லை. கடந்த 30 ஆண்டுகளில் மத்திய அரசு துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% விழுக்காடு முழுமையாக வழங்கப்படவில்லை. ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்கள் முன்னேறுவதை பாஜக அரசு விரும்பவில்லை. எனவே தான் பாஜக அரசுக்கு சமூக நீதிக்கு எதிராக உள்ளது.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், தீடீரென இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சமூக நீதி வழங்கிய வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்தபோது இதே ஆர்.எஸ்.எஸ். எங்கே போனது?. அன்றைக்கு ஆட்சியை கவிழ்த்த பாஜகவை பின்னால் இருந்து இயக்கியது இதே ஆர்.எஸ்.எஸ்தான். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் விளிம்புநிலை மக்களை ஏமாற்ற மோகன் பகவத் இப்படி சொல்கிறாரே தவிர உள்ளார்ந்த ஈடுபாட்டில் சொல்லவில்லை.
இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுகளிடம் இருக்க வேண்டும். அந்தந்த மாநிலங்களில் மக்கள் விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். இடஒதுக்கீடு மாநிலத்தின் உரிமை என்று அதிகாரத்தை மாற்றி வழங்கினால்தான், அந்தந்த மாநிலங்கள், தங்கள் மக்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை வழங்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.