சென்னை விமான நிலையத்தில் லண்டன் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு - 276 பயணிகள் உயிர் தப்பினர்


சென்னை விமான நிலையத்தில் லண்டன் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு - 276 பயணிகள் உயிர் தப்பினர்
x

சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்ல இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ரத்து செய்யப்பட்டது. இதனால் 276 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு லண்டனில் இருந்து பயணிகள் விமானம் அதிகாலை 3.30 மணிக்கு வந்து, மீண்டும் சென்னையில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு லண்டன் புறப்பட்டு செல்லும். ஆனால் லண்டனில் இருந்து அந்த விமானம் நேற்று காலை சென்னைக்கு ஒரு மணி நேரம் தாமதமாக 4.30 மணிக்கு வந்தது.

சென்னையில் இருந்து அந்த விமானத்தில் லண்டன் செல்ல 276 பயணிகள் தயாராக இருந்தனர். ஆனால் லண்டனில் இருந்து சென்னை வந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளதாகவும், அதை சரி செய்த பின்னர் இயக்கவும் என்று குறிப்பு எழுதி வைத்து விட்டு விமானி ஓய்வுக்கு சென்று விட்டார்.

இதையடுத்து லண்டன் செல்ல வேண்டிய விமானம் தாமதமாக காலை 10 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

விமான பொறியாளர்கள் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தொழில்நுட்ப கோளாறை உடனடியாக சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து சென்னையில் இருந்து லண்டன் செல்ல இருந்த விமானம் ரத்து செய்யப்படுவதாகவும், விமானம் நாளை (அதாவது இன்று) காலை புறப்பட்டு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து பயணிகள் அனைவரும் சென்னையில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த நடவடிக்கையால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு அதில் இருந்த 276 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.


Next Story