நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்குப்பதிவு
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
Live Updates
- 19 April 2024 3:35 PM IST
கோவையில் போலீசார் - தி.மு.க.வினர் இடையே தள்ளுமுள்ளு
கோவை பி.என்.புதூர் பகுதியில் போலீசார் - தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பூத் சிலிப் வழங்கும் இடத்தில் கூட்டம் கூடியதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பிற்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- 19 April 2024 3:28 PM IST
தேர்தலை புறக்கணித்த மதுரை கிராம மக்கள்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சக்கிலியங்குளம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் மதுரை-போடி அகல ரெயில் பாதையில் தரைப்பாலம் அமைக்கக்கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், பாலம் இதுவரை அமைக்கப்படாத நிலையில் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தால் வாலாந்தூரில் உள்ள இந்த கிராம மக்களுக்கான வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது.
- 19 April 2024 3:20 PM IST
ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்; நடிகர் விஜய் அழைப்பு
நடிகரும், தமிழ்நாடு வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது ஜனநாயக கடமையாற்றினார்.
இந்நிலையில், வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டுமென விஜய் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
- 19 April 2024 3:11 PM IST
பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு
ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட அய்யப்பன் தாங்கள் ஊராட்சியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் பசுமை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வெயில் சுட்டெரித்துவரும் நிலையில் வாக்குச்சாவடி மையத்தின் நுழைவாயிலில் செடிகள் வைக்கப்பட்டு பச்சை பசேல் என தென்னங்கீற்றுகள் வைக்கப்பட்டுள்ளன. பானைகளில் குடிநீர் வைத்தும் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் உபயோகத்தை தடுக்க பசுமை வாக்கு சாவடி அமைக்கப்பட்டது.
- 19 April 2024 2:56 PM IST
வடசென்னை: வாக்குப்பதிவில் குளறுபடி என புகார்
வடசென்னையில் உள்ள வியாசர்பாடி எம்.கே.பி.நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் பா.ஜ.க. சின்னமான தாமரைக்கு லைட் எரிவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து வாக்குபதிவில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தி.மு.க. , அ.தி.மு.க. பூத் முகவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
- 19 April 2024 2:47 PM IST
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மும்முரமாக நடைபெற்று வருகிறது. காலை முதல் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அரசு தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.
வாக்களித்தப்பின் செய்தியாளர்களிடம் பேசிய தங்கம் தென்னரசு,
நாட்டு மக்கள் இந்த தேர்தலில் தெளிவான தீர்ப்பு வழங்க உள்ளனர். தமிழ்நாடு முதல்-அமைச்சரின் கடந்த மூன்று ஆண்டு நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கும் விதமாக இந்த தேர்தல் முடிவு இருக்கும். மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழ்வதற்கு ஆதரவாக காலை முதல் ஆர்வத்துடன் பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர். மத்தியில் இந்த தேர்தலின் முடிவு பெறும் மாற்றத்தை கொண்டு வரும்
இவ்வாறு அவர் கூறினார்.
- 19 April 2024 1:51 PM IST
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தமிழ்நாட்டில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 40.05 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 44.08 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 32 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
- 19 April 2024 1:19 PM IST
சேலத்தில் வாக்களிக்கச் சென்ற இரண்டு வாக்காளர்கள் மயங்கி விழுந்து உயரிழந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பந்தல், வாக்காளர்கள் அமர்ந்து செல்வதற்கான இருக்கைக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது- தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு
- 19 April 2024 12:43 PM IST
நடிகரும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவருமான விஜய் , நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.