தமிழகத்தில் யார்.. யாருடன் கூட்டணி..? சூடுபிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல் களம்


தமிழகத்தில் யார்.. யாருடன் கூட்டணி..? சூடுபிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல் களம்
x
தினத்தந்தி 7 Feb 2024 3:54 PM IST (Updated: 7 Feb 2024 7:27 PM IST)
t-max-icont-min-icon

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிட்டு அதில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தமிழ்நாட்டில் தேர்தல் களம் பரபரப்பான சூழலை அடைந்துள்ளது. கூட்டணி யார் யாருடன் என்ற பேச்சு பரவலாக தமிழகத்தில் கேட்க தொடங்கி இருக்கிறது.

தி.மு.க. கூட்டணி, சட்டசபை தேர்தலை சந்தித்த அதே கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. கூட்டணியை இறுதி செய்ய பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போதைக்கு அந்த கூட்டணியில் இருந்து பாரிவேந்தரின் இந்திய தேசிய ஜனநாயக கட்சி மட்டுமே வெளியேறி இருக்கிறது. அதை ஈடுசெய்ய கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தி.மு.க. கூட்டணியில் இணையும் என்று கூறப்படுகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிட்டு அதில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அக்கூட்டணி பெற்ற வாக்குகள் 2 கோடியே 27 லட்சத்து 89 ஆயிரம் ஆகும். மொத்தம் 53.15 சதவீத ஓட்டுகளை கைப்பற்றி இருந்தது. கடந்த முறை போல தி.மு.க.வுடன் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ம.தி.மு.க. ஆகியவை நீடிக்க வாய்ப்பு இருக்கிறது. அதற்கான பேச்சுவார்த்தையும் தொடருகிறது.

புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியையும் கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க. கூட்டணியில் கடந்த முறை பா.ம.க, பா.ஜனதா, தே.மு.தி.க, புதிய தமிழகம், தமிழ்மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி ஆகியவை இடம் பெற்று இருந்தன. இந்த கூட்டணிக்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்தது. தேனி தொகுதியில் அ.தி.மு.க.சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டுமே வெற்றிக்கனியை பறித்தார். இந்த கூட்டணிக்கு 30.57 சதவீதம் வாக்குகள் கிடைத்து இருந்தன. இந்த கூட்டணி பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 33 லட்சம் ஆகும்.

நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு 3.9 சதவீத வாக்குகளுடன் 16 லட்சத்து 45 ஆயிரம் ஓட்டுகளை பெற்று இருந்தது.

இதுபோல தனித்து களம் கண்ட டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 22 லட்சத்து 29 ஆயிரத்து 849 வாக்குகளை பெற்றது. இக்கட்சியுடன் எஸ்.டி.பி.ஐ கட்சி ஒரு தொகுதியில் போட்டியிட்டது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 16 லட்சத்து 13 ஆயிரம் ஓட்டுகளை வாங்கி இருந்தது.

2014-ம் ஆண்டு தேர்தல் களம் இதற்கெல்லாம் முற்றிலும் மாறுபட்டது. அப்போது தனித்து களம் கண்ட ஜெயலலிதா 39 தொதிகளில் 37 இடங்களை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தார். 44.92 சதவீத வாக்குகளை கைப்பற்றிய அ.தி.மு.க.பெற்ற ஓட்டுகள் ஒரு கோடியே 79 லட்சத்து 83 ஆயிரம் ஆகும்.

பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. கூட்டணி 26.8 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. அக்கூட்டணிக்கு ஒரு கோடியே 8 லட்சத்து 87 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்தன. ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. அப்போது தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இருந்தன. 8 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி 3-வது இடத்துக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

பா.ஜனதா தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த கூட்டணியில் தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க, இந்திய ஜனநாயக கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, புதிய நீதிக்கட்சி ஆகியவை இடம் பெற்றன. இக்கூட்டணியில் தே.மு.தி.க 14 தொகுதிகளில் போட்டியிட்டது. பா.ம.க 8 தொகுதிகளிலும், பா.ஜனதா, ம.தி.மு.க ஆகியவை தலா 7 தொகுதிளிலும் களம் கண்டன. இந்திய ஜனநாயக கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, புதிய நீதிக்கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதியில் போட்டியிட்டாலும் பா.ஜனதாவின் தாமரை சின்னத்திலேயே தேர்தலை சந்தித்தன.

18.5 சதவீத ஓட்டுகளை பெற்றாலும் இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு கன்னியாகுமரியிலும், பா.ம.கவுக்கு தருமபுரியிலும் வெற்றி கிடைத்தது. இந்த கூட்டணி பெற்ற ஓட்டுகள் 75 லட்சத்து 23 ஆயிரம் ஆகும்.

2014 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 2.1 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றது. அக்கட்சி பெற்ற ஓட்டுகள்-8 லட்சத்து 66 ஆயிரம் ஆகும். இதில் கன்னியாகுமரியில் மட்டும் அக்கட்சி இரண்டாம் இடத்தை பெற்று டெபாசிட்டை பெற்றது.

கம்யூனிஸ்டு கட்சிகளும் கூட்டணி அமையாததால் தனித்து போட்டியிட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 9 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி 8 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

இந்த தேர்தல்களை விட 2024 நாடாளுமன்ற தேர்தல் களம் வித்தியாசமாக காட்சி அளிக்கிறது. தி.மு.க. கூட்டணியை தவிர்த்து மற்ற கூட்டணிகள் இன்னும் உறுதியாகவில்லை.

அ.தி.மு.க. கூட்டணியில் யார் சேருவார்கள் என்பது இன்னும் உறுதியாகவில்லை. அதுபோல பா.ஜனதா கூட்டணியும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. என்றாலும் மறைமுகமாக பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை பா.ம.க, தே.மு.தி.க வை தனது கூட்டணியில் சேர்க்க விரும்புகிறது.

மத்தியில் ஆட்சியை கைப்பற்றுவது உறுதி என்ற மனநிலையில் பா.ஜனதா உள்ளது. இதனால் மோடியை நம்பி கூட்டணியில் பல கட்சிகளை சேர்க்க வலை வீசுகிறது. பா.ஜனதா கூட்டணியில் ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சேருவது உறுதி ஆகியுள்ளது.

பா.ஜனதா கட்சி தனது அணியில் பா.ம.க., தே.மு.தி.க.வை சேர்த்து 2014 நாடாளுமன்ற தேர்தலை போல மும்முனை அல்லது நான்கு முனைப்போட்டியில், சில தொகுதிகளை கைப்பற்ற காய் நகர்த்தி வருகிறது. யார்.. யார்.. எந்த அணி? என்பது இன்னும் சில நாட்களில் உறுதியாகி விடும்.


Next Story