உள்ளாட்சி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை திருவள்ளூர் மாவட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் விவரம்
உள்ளாட்சி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் திருவள்ளூர் மாவட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள மாம்பாக்கம் ஊராட்சிமன்ற தலைவராக இருந்த ஜெயராமன் சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். இதனால் ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு கடந்த 9-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. பிரதீப்அசோக்குமார், மணிமாறன் ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். மொத்தமுள்ள 1,736 ஓட்டுகளில் 1,329 வாக்குகள் பதிவானது. பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று ஓட்டுகள் எண்ணப்பட்டன.
பிரதீப்அசோக்குமார் 867 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். மணிமாறன் 445 ஓட்டுகள் பெற்று தோல்வியை தழுவினார். பிரதீப் அசோக்குமார் வெற்றி பெற்றதையடுத்து அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினர்.
பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 1-வது வார்டு கவுன்சிலராக கடந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஜெகதீஷ் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனார். சமீபத்தில் அவர் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதனால் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் 1-வது வார்டில் இடைத்தேர்தல் இந்த மாதம் 9-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் சேகர், பா.ம.க. சார்பில் பார்கவன் மற்றும் உத்தர குமார், சரவணன், மோகன்ராஜ், ராஜேந்திரன், ராஜா ஆகியோர் போட்டியிட்டனர். இந்த வார்டுக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது.
தேர்தல் அலுவலர் கென்னடி பூபாலராயன் முன்னிலையில் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. வேட்பாளர் சேகர் அதிக ஓட்டுகளை பெற்று முன்னணியில் இருந்தார். முடிவில் ஓட்டு எண்ணிக்கை முடிந்த போது அவர் 2,582 ஓட்டுகளையும், எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் பார்கவன் 541 ஓட்டுகளையும் பெற்றார். இதையடுத்து தி.மு.க. வேட்பாளர் சேகர் 2,041 ஓட்டுகள் அதிகம் பெற்று அமோக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அகரமேல் ஊராட்சியில் 3-வது வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் கடந்த 9-ந்தேதி நடந்தது. மொத்தம் 343 ஓட்டுகள் உள்ள நிலையில் ஓட்டுப்பதிவின் போது 40 ஓட்டுகள் கூடுதலாக பதிவானதாக 2 வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து புகார் அளிக்குமாறும் மாவட்ட கலெக்டரிடம் அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் நடத்தும் அதிகாரி கூறிவிட்டு பதிவான ஓட்டுகளை பூந்தமல்லியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு ஓட்டுகள் எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைத்தார்.
ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியது. இதில் ராமச்சந்திரன் 161 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். சரத்குமார் 113 ஓட்டுகளும் மணிகண்டன் 48 ஓட்டுகளும் பெற்றனர். 7 செல்லாத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. அகரமேல் ஊராட்சி 3-வது வார்டில் ராமச்சந்திரன் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்.
மீஞ்சூர் ஒன்றியம் மெதூர் ஊராட்சியில் காலியாக இருந்த 3-வது வார்டில் இடைத்தேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை நேற்று மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இதில் சீதாராமன் 152 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். கோபி 86 ஓட்டுகளும் நாகராஜ் 18 ஓட்டுகளும் பெற்ற நிலையில் 3 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது.
பொன்னேரி அடுத்த நல்லூர் ஊராட்சியில் 8-வது வார்டுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று சோழவரம் ஒன்றிய அலுவலகத்தில் எண்ணப்பட்டது. இதில் 183 ஓட்டுகள் பெற்று செல்வன் வெற்றி பெற்றார். முத்துச்செல்வன் 175 ஓட்டுகளும், பிரபாகரன் 143 வாக்குகளும் பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் வட்டார வளர்ச்சி அலுவலருமான குலசேகரன் தெரிவித்தார்.