நீட் ஒழிப்பு கையெழுத்து இயக்கம் மகத்தான வெற்றியை பெறுகிற வகையில் உழைத்திடுவோம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நம் மாணவர்களின் மருத்துவராகும் கனவை நனவாக்குவோம்.என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
சென்னை,
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் பற்றி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள்ள பதிவில்,
முதல்-அமைச்சர் அவர்கள், கடந்த அக்டோபர் 21 அன்று தொடங்கி வைத்த #நீட்_விலக்கு_நம்_இலக்கு கையெழுத்து இயக்கம் மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது.
'50 நாட்கள் - 50 லட்சம் கையெழுத்துகள்' என்ற இலக்கோடு தொடங்கப்பட்ட இந்த கையெழுத்து இயக்கம், இன்றோடு 50 நாட்களை கடந்திருக்கிறது.
இணையத்தில் 56 லட்சம் - அஞ்சல் வழியே 16 லட்சம் என 72 லட்சத்துக்கும் அதிகமான கையெழுத்துகள் பெறப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டு மக்கள் நீட் அநீதிக்கு எதிராக தொடர்ந்து கையெழுத்திட்டு வருகின்றனர்.
இந்த கையெழுத்துகளை எல்லாம் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களிடம் சேலத்தில் நடைபெறவுள்ள தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டில் ஒப்படைக்கவுள்ளோம்.
இதற்காக களத்திலும் - இணையத்திலும் அயராது உழைத்து வரும் மாவட்டக் கழக செயலாளர்கள் - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - கிளைக் கழக நிர்வாகிகள் - தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நீட் ஒழிப்புக்கான இந்த கையெழுத்து இயக்கம் மகத்தான வெற்றியை பெறுகிற வகையில் உழைத்திடுவோம் - நம் மாணவர்களின் மருத்துவராகும் கனவை நனவாக்குவோம்.என தெரிவித்துள்ளார்