பலவீனமான பா.ஜ.க.வை செயல்பட வைப்போம்: திமுக எம்.பி.க்களுக்கு முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்


பலவீனமான பா.ஜ.க.வை செயல்பட வைப்போம்: திமுக எம்.பி.க்களுக்கு முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்
x

தமிழக கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என எம்.பி.க்களுக்கு முதல்-அமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னை,

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது. இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. எம்.பி.க்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது;

"நாற்பதுக்கு நாற்பது என்ற இந்த வெற்றி என்பது சாதாரணமான வெற்றி அல்ல. 2004-ம் ஆண்டு, 20 ஆண்டுகளுக்கு முன் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நமக்குப் பெற்றுத் தந்த வெற்றி இது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இந்த தேர்தலில் அந்த ஒன்றையும் சேர்த்து நாற்பதுக்கு நாற்பது வென்றுவிட்டோம். முழுமையான வெற்றியைப் பெறுவது என்பது சாதாரணமான சாதனை அல்ல, வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையாகும்.

370 தொகுதிகளில் வெற்றி பெறுவோம், 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று சொல்லி 240-க்கு இறங்கி விட்டது பாஜக. இந்தச் சூழலில் நாம் தமிழ்நாட்டுக்கான கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் எடுத்து வைத்து வாதாட வேண்டும், போராட வேண்டும். பலவீனமான பாஜக அரசை, நமது முழக்கங்களின் மூலம் செயல்பட வைக்க வேண்டும். ஒரு விதத்தில் பார்த்தால் பாஜகவுக்கு சரிக்குச் சமமாக இந்தியாக் கூட்டணி எம்.பி.க்கள் இருக்கப் போகிறோம். இந்த வாய்ப்பை ஆக்க பூர்வமான விவாதங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அனைத்து பகுதிக்கும் சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும். நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்வைக்க வேண்டும். தி.மு.க.வின் கடந்தகால நிலைப்பாடுகளை உணர்ந்து தெரிந்து நாடாளுமன்றத்தில் நடக்கவேண்டும். மக்களை காக்கும் பணியை செய்து தி.மு.க.வுக்கும் தமிழக மக்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்."

இவ்வாறு அவர் உரையாற்றினார்.


Next Story