புதுவண்ணாரப்பேட்டையில் போலீஸ் வேனில் அத்துமீறி வீடியோ பதிவு செய்த சட்டக்கல்லூரி மாணவர்-நண்பர் கைது


புதுவண்ணாரப்பேட்டையில் போலீஸ் வேனில் அத்துமீறி வீடியோ பதிவு செய்த சட்டக்கல்லூரி மாணவர்-நண்பர் கைது
x

புதுவண்ணாரப்பேட்டையில் போலீஸ் வேனில் அத்துமீறி வீடியோ பதிவு செய்த சட்டக்கல்லூரி மாணவர் மற்றும் அவரின் நண்பரை போலீசார் கைது செய்தனர். சமூகவலைதளங்களில் வீடியோ பரவியதால் சிக்கினர்.

சென்னை

சென்னை ஐகோர்ட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார், புதுவண்ணாரப்பேட்டை துறைமுக பொறுப்பு கழக குடியிருப்பு பகுதியில் தங்கி வருகின்றனர். அவர்களை புதுப்பேட்டை ஆயுதப்படை போலீசில் டிரைவராக பணிபுரியும் நவீன்குமார் தினமும் போலீஸ் வேனில் அழைத்துச்சென்று ஐகோர்ட்டில் இறக்கிவிட்டு மீண்டும் துறைமுக பொறுப்பு கழகம் குடியிருப்பு வளாகத்தில் வேனை நிறுத்தி விட்டு செல்வது வழக்கம்.

அப்படி நிறுத்தி இருந்த போலீஸ் வேனில் அத்துமீறி ஏறிய 4 வாலிபர்கள், ரவுடி போன்று வேடமணிந்து போலீஸ் வேனில் இருந்து இறங்கி வருவது போன்றும், பின்னர் காசிமேடு மீன்பிடி துறைமுக பழைய வார்ப்பு பகுதியில் இளைஞர் ஒருவரை கத்தியால் வெட்டி கொலை செய்வது போலவும் வீடியோ பதிவு செய்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸ் வேன் டிரைவர் நவீன்குமார் அளித்த புகாரின்பேரில் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வீடியோவை வெளியிட்ட புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவரான அம்பேத்கர் சட்ட கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் விக்னேஷ் (வயது 22), மணலி புதுநகரைச் சேர்ந்த அவரது நண்பர் சஞ்சய் (22) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story