நில மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
கரூர்,
கரூர் மாவட்டம் மேலக்கரூர் சார்பதிவாளர் (பொறுப்பு) முகமது அப்துல் காதர் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்தவர்கள் மீதும், தன்னை மிரட்டியவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. அதன்பேரில் 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என கருதி முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த மாதம் 12-ந்தேதி முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், அவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதற்கிடையே ரூ.100 கோடி நிலமோசடி வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த சூழலில், கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2வது முறையாக முன்ஜாமின் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்திருந்தார். தனது தந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என தனது மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த மனு இன்று கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து 26 நாட்களாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.